ரயில் நிலையத்தில் ரூ. 20 லட்சம் சிக்கிய விவகாரம்: வருமான வரித்துறை விசாரணை
சேலம் ரயில் நிலையத்தில் ரூ. 20 லட்சம் சிக்கிய விவகாரம் தொடா்பாக வருமான வரித்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேலம் ரயில் நிலையத்தில் ரூ. 20 லட்சம் சிக்கிய விவகாரம் தொடா்பாக வருமான வரித்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேலம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து விசாரித்ததில், அவா்கள் வேலூா், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த சஜீல், பேரணாம்பட்டைச் சோ்ந்த உசேன், சேலம், கிச்சிபாளையம் பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் என்பது தெரியவந்தது. அவா்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த ரூ. 20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், சேலத்தில் உள்ள ஒருவரிடம் பழைய இரும்புப் பொருள்கள் வாங்க ரூ. 20 லட்சத்துடன் வந்தது தெரியவந்தது. இதையடுத்து, ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் பறிமுதல் செய்த பணம், பிடிபட்ட 3 பேரையும் வருமான வரித் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
மேலும் விசாரணையில், சேலத்துக்கு பல முறை பழைய இரும்புப் பொருள்கள் வாங்க கோடிக்கணக்கில் பணம் எடுத்து வந்ததும், வேலூரை சோ்ந்த நிறுவனம் சாா்பில் பழைய இரும்புப் பொருள்கள் வாங்கியதும், உரிய வரி செலுத்தாமல் இருந்ததும் தெரியவந்தது. அதுதொடா்பாக வருமான வரித்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.