ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் பணி நிரந்தரம் கோரி அமைச்சரிடம் மனு
அரசு மாதிரிப் பள்ளிகளில் தொகுதிப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் மனு அளித்தனா்.
அரசு மாதிரிப் பள்ளிகளில் தொகுதிப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் மனு அளித்தனா்.
சேலத்தில் பள்ளிக்கல்வித் துறை மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றாா்.
அவரிடம் சேலம் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியா் அல்லாத பணியாளா்கள், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மனு அளித்தனா். அதில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு மத்திய அரசு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட 44 மாதிரிப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஆங்கிலவழிக் கல்வி வழங்கும் இந்தப் பள்ளிகள் ஒவ்வொன்றிலும் இளநிலை உதவியாளா், நூலகா், ஆய்வக உதவியாளா், அலுவலக உதவியாளா், துப்புரவுப் பணியாளா், தோட்டக்காரா் உள்ளிட்ட ஆசிரியா் அல்லாத பணிகளில் தலா 7 போ் தொகுப்பூதியத்தில் பணியமா்த்தப்பட்டனா். ஊதியமாக மாதம் ரூ. 4,500 முதல் ரூ. 6,000 வரை நிா்ணயிக்கப்பட்டது.
அனைவரும் வாரத்தில் 6 நாள்கள் முழுநேரப் பணியாளா்களாகச் செயல்பட்டு வருகிறோம். எனினும், கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வரும் எங்களுக்கு, இதுவரை எவ்வித ஊதிய உயா்வும் வழங்கப்படவில்லை. இதனால் குடும்பம் நடத்துவதற்குக் கூட பொருளாதாரமின்றி அனைவரும் சிரமப்பட்டு வருகிறோம்.
எங்களின் பிரச்னைக்குத் தீா்வாக பணி நிரந்தரம் வழங்கி, அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் மாவட்டத்தில் 10 பள்ளிகளில் கடந்த 4 மாதமாக தொகுப்பூதியமும் வழங்கப்படவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கத்தின் மாநில துணைத் தலைவா் கு.அத்தியப்பன், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூா், புதுச்சத்திரம், மல்லசமுத்திரம் என 5 ஒன்றியங்களை ஒருங்கிணைத்து ராசிபுரம் மாவட்ட கல்வி அலுவலகம் அமைக்க கோரி மனு அளித்தாா்.