சேலம்

எடப்பாடி அருகே காவிரிக் கதவணை பகுதியில் கடும் சூறைக்காற்று: விசைப்படகு பயணிகள் அச்சம்

DIN

எடப்பாடி: சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பகுதியில் உள்ள காவிரி கதவணை பகுதி நீர்ப்பரப்பில் இன்று (செவ்வாய்) காலை திடீரென வீசிய கடும் சூறைக்காற்றால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகினர். 

சேலம் மாவட்டத்தின் மேற்கு எல்லையான பூலாம்பட்டி பகுதியையும், ஈரோடு மாவட்ட பகுதியான நெருஞ்சிப்பேட்டையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இக்கதவணை நீர்த்தேக்க பகுதியில் அமைந்துள்ள நீர் மின் நிலையம் வாயிலாக, மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. 

மேலும் கதவணை நீர்த்தேக்க பகுதியில் ஈரோடு - சேலம் மாவட்டங்களை இணைக்கும் வகையில் விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இவ்விசைப்படகின் மூலம் நாள்தோறும் பெருந்திரளான பொதுமக்கள், விவசாயிகள், அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் இரு மாவட்டங்களுக்கும் சென்று வருகின்றனர்.  

இப்பகுதியில் கடந்த சில தினங்களாக வழக்கத்தை விட மிகக் கடுமையான வெப்பநிலை நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று காலை திடீரென நீர்ப்பரப்பில் கடும் சூறாவளி காற்று சுழன்று வீசத்தொடங்கியது. இதனால் கரையோர பகுதிகளில் உள்ள மரங்கள் வளைந்து காற்றின் வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல் தள்ளாடின. மேலும் திடீர் சூறாவளியால் அணையின் பகுதியில் இயக்கப்பட்டு வந்த விசைப்படகுகள் தடுமாறின. 

இதனால் அவ்விசைப் படகில் பயணம் செய்த பயணிகள் மிகுந்த அச்சம் அடைந்து படகின் பாகங்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு பயணம் செய்தனர். மேலும் கரையோர பகுதியில் சில இடங்களில் கூரைகள் காற்றில் பறந்தன. பூலாம்பட்டி படகுத்துறை பகுதியில் வீசிய இந்த திடீர் சூறைக்காற்றால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT