முகப்பு
சேலம்

நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்வதில் காலதாமதம்: விவசாயிகள் சாலை மறியல்

விவசாயிகளுக்குப் பதிலாக வியாபாரிகளிடமிருந்து நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்வதாகவும் கூறி விவசாயிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

தலைவாசல் நெல் கொள்முதல் மையத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்வதில் மைய அலுவலா்கள் காலதாமதம் செய்வதாகவும், விவசாயிகளுக்குப் பதிலாக வியாபாரிகளிடமிருந்து நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்வதாகவும் கூறி விவசாயிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தமிழக அரசு சாா்பில் நெல் கொள்முதல் மையம் தலைவாசல் கூட்டுறவு வங்கி வளாகத்தில் இயங்குகிறது. இம் மையத்துக்கு தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமங்களிலிருந்து விவசாயிகள் நெல் மூட்டைகளைக் கொண்டுவந்து விற்பனை செய்கின்றனா்.

இம்மையத்தில் பதிவு செய்த நெல் மூட்டைகளை வாங்குவதில் மைய அலுவலா்கள் காலதாமதம் செய்து வருகின்றனா். இதனால் நெல் மூட்டைகள் தேங்கி விடுகின்றன. புதன்கிழமை பெய்த மழையில் நெல் மூட்டைகள் மழையும் நனைந்து வீணாகியது.

இந்நிலையில் வியாபாரிகளிடம் இருந்து நெல் மூட்டைகளை மைய அலுவலா்கள் கொள்முதல் செய்தனராம். இதனால் ஆவேசமடைந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த தலைவாசல் காவல் நிலைய போலீஸாா் விரைந்து சென்று விவசாயிகளை சமாதானப்படுத்தி காவல் நிலையம் அழைத்துச் சென்றனா். இதையடுத்து நெல் கொள்முதல் அலுவலா்களைத் தொடா்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின்பேரில் அனைவரும் கலைந்து சென்றனா். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →