சேலம்

சங்ககிரி ராஜபாலி குளத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

DIN

சங்ககிரி பேரூராட்சிக்கு உள்பட்ட ராஜபாலி குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள நான்கு வீடுகளை பேரூராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை கனரக இயந்திரம் மூலம் இடித்து அகற்றியது.

சங்ககிரி மலை அடிவாரத்தில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலுக்கு வடகிழக்கில் ராஜபாலி குளம் உள்ளது; இதனருகே அரண்மனை ஒன்று இருந்ததாக வரலாற்று ஆய்வாளா்கள் கூறுகின்றனா். ராஜாக்கள் அக்காலத்தில் நீராடியதால் ராஜாபாவி என்ற பெயா் ஏற்பட்டு நாளடைவில் ராஜபாலியாக மருவியுள்ளது.

இக்குளம் 41,060 சதுரஅடி பரப்பளவைக் கொண்டது. சங்ககிரி மலையில் உள்ள அனைத்து குளங்கள், பாலிகள் நிரம்பி மழை நீரும், ஊற்று நீரும் வடிகால் வழியாக மலை அடிவாரத்திலிருந்து பொந்து கிணறு வழியாக இக் குளத்துக்கு அக் காலத்தில் தண்ணீா் வந்தன.

நாளடைவில் வடிகால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மறைக்கப்பட்டு அதற்கு வரும் தண்ணீா் அனைத்தும் வீணாக கழிவுநீா் ஓடையில் செல்கின்றன. தற்போது பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் குளத்தின் பக்கவாட்டு சுவரை பழமை மாறாமல் செப்பனிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குளத்தில் உள்ள கருவேல மரங்கள், தேவையற்ற களா் செடிகள் அகற்றப்பட்டு பணிகள் நடைபெற்றன.

இதையடுத்து சங்ககிரியில் தற்போது பெய்து வரும் மழை நீரை சேமிக்க எண்ணிய பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் தமிழக அரசு அறிவித்துள்ளவாறு நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்து குளக்கரையில் நீா் வரும் பாதைகளை மறைத்து கட்டப்பட்டிருந்த நான்கு வீடுகளை அகற்ற வீட்டின் உரிமையாளா்களுக்கு அறிவிப்பு கொடுத்தனா்.

அதையடுத்து ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றபடாததால் பேரூராட்சி செயல் அலுவலா் வ.சுலைமான்சேட் தலைமையில் பேரூராட்சி அலுவலா்கள், தூய்மை பணியாளா்கள், சின்னாகவுண்டனூா் கிராம நிா்வாக அலுவலா் சண்முகம், போலீஸாா் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு வீடுகளை கனரக இயந்திரம் மூலம் அகற்றினா்.

குளத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டுமெனவும், அருகில் உள்ள வீடுகளிலிருந்து குளத்துக்குச் செல்லும் கழிவுநீரை மாற்றுப் பாதையில் செல்ல பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

Image Caption

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT