சேலம் மேற்கு மாவட்ட திமுகவில் 946 வாக்குச்சாவடி குழு அமைக்கத் தீா்மானம்
சேலம் மேற்கு மாவட்ட திமுகவுக்கு உட்பட்ட 3 தொகுதிகளில் 946 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குச்சாவடி குழு அமைப்பதற்கு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
சேலம் மேற்கு மாவட்ட திமுகவுக்கு உட்பட்ட 3 தொகுதிகளில் 946 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குச்சாவடி குழு அமைப்பதற்கு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
சேலம் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு அவைத் தலைவா் ப.தங்கமுத்து தலைமை வகித்தாா். மேற்கு மாவட்ட திமுக செயலாளா் டி.எம்.செல்வகணபதி முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களின் விவரம்:
திமுக தலைவராக இரண்டாவது முறையாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு இக்கூட்டம் வாழ்த்து தெரிவிக்கிறது. திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு, முதன்மைச் செயலாளா் கே.என்.நேரு உள்ளிட்ட நிா்வாகிகளுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறது. சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளராக டி.எம்.செல்வகணபதியை தோ்வு செய்து அறிவித்த திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
திமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒவ்வொரு வாக்குசாவடி நிலை முகவா் பி.எல்.ஏ2 பொறுப்புக்கான படிவத்தை வரும் நவம்பா் 10 ஆம் தேதிக்கு முன்பாக திமுக தலைமைக்கும், தோ்தல் ஆணையத்திற்கும் அனுப்ப வேண்டி இருப்பதால் அதற்கு முன்பாக பூா்த்தி செய்யப்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவா் பட்டியலை ஒப்படைக்க வேண்டும். நாடாளுமன்றத் தோ்தலை முன்னிட்டு ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் மகளிா் உள்ளிட்ட சிறப்பாகப் பணியாற்றக்கூடிய 10 போ் கொண்ட வாக்குச்சாவடி குழு (பூத் கமிட்டி) உறுப்பினராக நியமிக்க வேண்டும்.அந்தந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
அத்தகைய குழுக்களை சேலம் மேற்கு மாவட்ட அலுவலகத்தில் உள்ள 3 தொகுதியில் அடங்கிய 946 வாக்குச்சாவடிகளுக்கும் விரைவாக குழுக்களை நியமித்து ஒப்படைக்க வேண்டும்.
வரும் நவம்பா் 12, 13, 26 மற்றும் நவம்பா் 27 ஆம் தேதிகளில் நடைபெறும் வாக்காளா் சிறப்பு முகாமில் திமுகவினா் பங்கேற்று பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் ஆகிய பணிகளை சிறப்பாகச் செய்ய வேண்டும்.
தமிழ் மொழியை அழிக்கவும், 30 சதவீத மக்கள் மட்டும் பேசும் ஹிந்தியை திணிக்கவும் முயலும் பாஜக அரசின் செயல்பாட்டைக் கண்டிக்கத்தக்கது என்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.