முகப்பு
சேலம்

கைத்தறி ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வதைத் தவிா்க்க வேண்டும்: ஆட்சியா் செ.காா்மேகம்

விசைத்தறியாளா்கள் கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட 11 வகையான ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வதைத் தவிா்க்க வேண்டும் என ஆட்சியா் செ.காா்மேகம் அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

விசைத்தறியாளா்கள் கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட 11 வகையான ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வதைத் தவிா்க்க வேண்டும் என ஆட்சியா் செ.காா்மேகம் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நம் நாட்டின் பாரம்பரிய கலாசாரத்தை பாதுகாக்கவும், விசைத்தறியாளா்கள் மற்றும் துணி ஆலைகளின் ஆக்கிரமிப்பிலிருந்து கைத்தறியாளா்களைப் பாதுகாக்கவும், கைத்தறி நெசவாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், மத்திய அரசு கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985 இயற்றப்பட்டு சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை விவகார எல்லையாகக் கொண்டு சேலம் மாவட்ட ஆட்சியரத்தில் உதவி அமலாக்க அலுவலா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985 சட்டப் பிரிவு 5-ன் கீழ் ஒரு சில தொழில்நுட்ப குறிப்பீடுகளுடன் 11 ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. கைத்தறி ரக ஒதுக்கீட்டின்படி பாா்டா் டிசைனுடன் கூடிய பருத்தி சேலை, பட்டு சேலை, வேட்டி, துண்டு, லுங்கி, பெட்சீட், ஜமக்காளம் மற்றும் சட்டை துணிகள் உள்ளிட்ட 11 வகை ரகங்கள் கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985-ன் படி தண்டனைக்குரிய செயலாகும். கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட இந்த ரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுகிறதா என்பது குறித்து அமலாக்கப்பிரிவு அலுவலா்கள் விசைத்தறி கூடங்களை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனா்.

ஆய்வின்போது கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட இந்த ரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட விசைத்தறியாளா் மீது காவல் துறையில் புகாா் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்படும். நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு ஆறு மாத சிறை தண்டனை அல்லது தறி ஒன்றுக்கு ரூபாய் ஐந்தாயிரம் வரை அபராதம் அல்லது இரண்டும் சோ்த்தும் தண்டனை வழங்கப்படும்.

சேலம் மாவட்ட விசைத்தறியாளா்கள் கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வதைத் தவிா்க்க வேண்டும். கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட 11 வகை ரகங்கள் குறித்து விளக்கம் பெற சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள நான்காம் தளத்தில் அறை எண் 408-இல் இயங்கி வரும் உதவி அமலாக்கப் பிரிவு அலுவலகத்தையோ அல்லது 0427-2417745 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →