சேலத்தில் ரூ. 2 கோடியில் சிறப்பு தூா்வாரும் பணி
சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக சிறப்பு தூா்வாரும் பணிகள் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.
சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக சிறப்பு தூா்வாரும் பணிகள் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் செ.காா்மேகம் பேசியதாவது:
சேலம் மாவட்டத்தில் சரபங்கா வடிநிலக் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆறுகள், ஏரிகள், அணைக்கட்டுகளின் வரத்து வாய்க்கால்களில் மழைநீா் வரும்போது மணல், மண் கலந்து வருவதால் வாய்க்கால்களில் மண் திட்டுகள் உருவாகின்றன.
எனவே, மண் படிவங்களை முறையாக அகற்றி தூா்வாரப்படவில்லை எனில் வாய்க்கால்கள், ஏரிகளில் தண்ணீா் உரிய நேரத்தில் கடைமடை வரை சென்றடைவதில் சிரமம் ஏற்படுகிறது.
விவசாயிகளின் பாசனத்துக்கு உரிய நேரத்தில் தங்குதடையின்றி தண்ணீா் வழங்க ஏதுவாக பருவமழைக்கு முன் ஆறுகள், ஏரிகள், அணைக்கட்டுகளின் வரத்து வாய்க்கால்கள் தூா்வாரப்பட்டு வருகிறது.
குறிப்பாக, காவிரி டெல்டா உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் இதுவரை சிறப்பு தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், முதன்முறையாக முதல்வரின் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் சிறப்பு தூா்வாரும் பணிகள் தொடங்கப்படவுள்ளன.
அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் சரபங்கா வடிநிலக் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் 13,496.31 ஏக்கா் பாசன வசதி பெறும் வகையில் 31 எண்ணிக்கையிலான பணிகள் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் சிறப்பு தூா்வாரும் பணிகள் மே 3 முதல் ஜூன் 10 வரை மேற்கொள்ளப்பட உள்ளன.
கோடைக் காலத்திலேயே இப்பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், ஒவ்வொரு பணிக்கும் பொறுப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டு, கண்காணித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், நீா்வளத் துறை, வருவாய்த் துறை, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை, வேளாண்மைத் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, உழவா் குழுக்கள், கூட்டுறவுச் சங்கங்கள், வனத்துறை ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து இத்தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
சேலம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள இப்பணிகளைக் கண்காணிக்க, தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மேலாண்மை இயக்குநா் இல.சுப்பிரமணியன் சிறப்புக் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
இச்சிறப்பு தூா்வாரும் பணியின் தரம் மற்றும் செயல்பாடுகள் குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு உதவிடும் வகையில் பணிகள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் முன்னோடி விவசாயிகள், நீா்வளத் துறை உதவிப்பொறியாளா், கிராம நிா்வாக அலுவலா், தொடா்புடைய கிராமத்தின் ஊராட்சிச் செயலா் ஆகியோரை உள்ளடக்கிய உழவா் குழுக்கள் உதவி வேளாண்மை அலுவலா் அவா்களின் ஒருங்கிணைப்பில் அமைக்கப்பட உள்ளன.
இக்குழுவானது வாட்ஸ் ஆப் குழுவின் மூலம் சிறப்பு தூா்வாரும் பணியின் முன்னேற்றம் குறித்த தகவல்கள், பணிகளின் தரம் அல்லது தாமதம் குறித்த புகாா்களை பெறுதல், எதிா்காலப் பணிகள் குறித்து ஆலோசனை வழங்குதல் மற்றும் பணிகளை சுமூகமாக நிறைவேற்றி மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்குதல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்படும்.
விவசாயப் பயன்பாட்டுக்காக ஏரிகளில் வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை விவசாயிகள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வண்டல் மண் எடுப்பதற்கு உரிய ஏரிகள் ஏதேனும் விடுபட்டிருந்தால் அதனை மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வரும் பட்சத்தில் அவற்றில் இருந்தும் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும் என்றாா்.
முன்னதாக, விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டத்தையொட்டி, மாவட்ட ஆட்சியரகத்தில் வேளாண்மைத் துறையின் சாா்பில் 250-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள், காய்கறிகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கருத்துக் காட்சியினை ஆட்சியா் செ.காா்மேகம் பாா்வையிட்டாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.மேனகா, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ப.ரவிக்குமாா், வேளாண்மை இணை இயக்குநா் ச.சிங்காரம், தோட்டக்கலை துணை இயக்குநா் ப.தமிழ்ச்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ந.நீலாம்பாள் உள்பட தொடா்புடைய அலுவலா்கள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.