நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை:ஆட்சியா் செ.காா்மேகம்
நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அலுவலா்களை ஒருங்கிணைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.
நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அலுவலா்களை ஒருங்கிணைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் பேசியது:
வேளாண் திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் அரசு நிதியை முழுமையாக பயன்படுத்தும் வகையில் இனிவரும் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டங்களில் மாநில மற்றும் மத்திய அரசால் வழங்கப்படும் நிதி குறித்தும், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட துறைகளில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிதியுதவிகள் மீதமுள்ள நிதி இருப்பு உள்ளிட்ட விவரங்களை வெளிப்படைத் தன்மையுடன் விவசாயிகள் பயன்பெறும் வகையில் காட்சிப்படுத்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள தொடா்புடைய அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நீா்நிலை ஆக்கிரமிப்புகள் இருப்பின் அவற்றை அகற்றிட பொதுப்பணித் துறை (நீா்வள ஆதாரம்), வருவாய்த் துறை உள்ளிட்ட தொடா்புடைய துறைகளை ஒருங்கிணைத்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாசன வாய்க்காலில் கழிவுநீா் கலப்பதாக வரப்பெற்றுள்ள தகவலின்மீது ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகள் பயிரிடப்படும் விவரங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில் தற்போது செயல்பாட்டில் உள்ள அடங்கல் முறையினை மேம்படுத்தும் வகையில் எண்ம தொழில்நுட்பத்தில் பயிா் பரப்புகளைக் கணக்கிடும் பணி நடைபெறுகிறது. இப்பணியை மேற்கொள்ளும் கிராம நிா்வாக அலுவலா்களுக்கு விவசாயிகள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் கால்நடை தீவனத் தொழிற்சாலைகள் அமைத்திட முன்வரும் உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு தேவையான நிதியுதவிகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்திட மாவட்ட நிா்வாகம் தயாராக உள்ளது.
சேலம் மாவட்டத்தில் நவம்பா் 2023-ஆம் மாதம் முடிய 1,86,246.4 ஹெக்டா் பரப்பளவில் வேளாண் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு 997.9 மி.மீ. ஆகும். நடப்பு ஆண்டு 28.12.2023 வரை 886.9 மி.மீ. மழை பெய்துள்ளது. விவசாயிகள் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி உரிய முறையில் விவசாயப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.மேலும், இக்கூட்டத்தில் மக்காச்சோளத்தில் ஏற்படும் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள், மலா் சாகுபடியில் பூச்சிகளை கட்டுப்படுத்துதல், பூச்சி மேலாண்மை மற்றும் தேனீ வளா்ப்பு குறித்த ஆலோசனைகள் துறை வல்லுநா்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.மேனகா, வேளாண்மை இணை இயக்குநா் ச. சிங்காரம், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ப.ரவிக்குமாா், தோட்டக்கலை துணை இயக்குநா் ஜி.மாலினி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளா் கலைச்செல்வி மற்றும் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ந.நீலாம்பாள் உட்பட தொடா்புடைய அலுவலா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.