முகப்பு
சேலம்

புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் இருந்து வசிஷ்டநதியில் இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.  

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:35 AM
வாழப்பாடி புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையிலிருந்து வசிஷ்டநதிக்கு தண்ணீர் திறக்கும் நிகழ்வில் பங்கேற்றவர்கள்.
பகிர்:

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் இருந்து வசிஷ்டநதியில் இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.  

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த அருநுாற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதியின் குறுக்கே, புழுதிக்குட்டை கிராமத்தில், 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 263.86 ஏக்கர் பரப்பளவில் ஆணைமடுவு அணை அமைந்துள்ளது. இந்த அணையால், குறிச்சி, நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னம நாயக்கன்பாளையம், சந்தரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பேளூர், குறிச்சி, கொட்டவாடி, அத்தனுார்பட்டி ஏரிகளும், ஆற்றுப்படுகை கிராமங்களும் நிலத்தடி நீராதாரமும் பாசன வசதியும் பெறுகின்றன. அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்தாண்டு இறுதியில் பெய்த பரவலான மழையால், அணையின் நீர்மட்டம் 52.55 அடியாக உயர்ந்து, 141.81 மில்லியன் கன அடி தண்ணீர் நிரம்பியது.

இந்நிலையில், இரு மாதங்களாக வாழப்பாடி பகுதியில் மழையில்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. எனவே, ஆனைமடுவு அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரை பாசனத்திற்கு திறந்து விட வேண்டுமென, புதிய ஆயக்கட்டு அணை வாய்க்கால் பாசனம் மற்றும் பழைய ஆயக்கட்டு ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, இன்று (பிப்.,23) காலை 8 மணி முதல் தொடர்ந்து 16 நாள்களுக்கு தினசரி வினாடிக்கு 50 கன அடி வீதம், (நாளொன்றுக்கு 4.32 மில்லியன் கனஅடி/ மொத்தம் 69.12 மில்லியன் கனஅடி) ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகளுக்கான வசிஷ்டநதியில் தண்ணீர் திறக்கவும், மார்ச் 11ஆம் தேதி காலை 8 மணி முதல் தொடர்ந்து 11 நாள்களுக்கு வலது வாய்க்காலில் வினாடிக்கு 35 கன அடி வீதமும், இடது வாய்க்காலில் வினாடிக்கு வினாடிக்கு 15 கன அடி வீதம் மொத்தம் வினாடிக்கு 50 கனஅடி (நாளொன்றுக்கு 4.32 மில்லியன் கனஅடி / 11 நாட்களுக்கு மொத்தம் 47.52 மில்லியன் கன அடி) தண்ணீர் திறக்கவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

அரசாணைப்படி, இன்று  காலை  புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் இருந்து தலைமை மதகு வழியாக வசிஷ்டநதியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. 


வசிஷ்டநதியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால், வசிஷ்டநதி ஆற்றுப்படுகை கிராம விவசாயிகளும், ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இவ்விழாவில், சேலம் டி.ஆர்.ஓ மேனகா தலைமையில், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் ஆனந்தன், உதவி செயற்பொறியாளர் கீதாராணி, உதவி பொறியாளர் சண்முகம் மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர். வரும் மார்ச் 11 முதல் அணைப்பாசனத்திற்கு, வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்படுமென பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.