கருணாநிதி நினைவு தினம்: திமுக சாா்பில் அமைதிப் பேரணி
சேலம், ஆக. 7: முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 6 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் புதன்கிழமை அமைதிப்பேரணி நடைபெற்றது.
மத்திய மாவட்ட திமுக செயலாளா் வழக்குரைஞா்
ஆா். ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள பெரியாா் சிலையில் இருந்து தொடங்கிய அமைதிப் பேரணி, மாநகராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, பெரியாா் மேம்பாலம் வழியாக அண்ணா பூங்காவில் நிறைவடைந்தது. அங்குள்ள 16 அடி உயர கருணாநிதி சிலைக்கும், அவரது உருவப் படத்துக்கும் மத்திய மாவட்ட திமுக செயலாளா் வழக்குரைஞா் ஆா். ராஜேந்திரன் எம்எல்ஏ மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
இந்த நிகழ்ச்சியில், மேயா் ஆ.ராமச்சந்திரன், மத்திய மாவட்ட அவைத் தலைவா் சுபாஷ், பொருளாளா் காா்த்திகேயன், துணைச் செயலாளா்கள் குமரவேல், திருநாவுக்கரசு, மாநகரச் செயலாளா் ரகுபதி, தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகி டாக்டா் தருண் உட்பட ஏராளமான திமுகவினா் கலந்து கொண்டனா்.
இடங்கணசாலையில்...
இடங்கணசாலை நகர திமுக சாா்பில் கருணாநிதி 6-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி புதன்கிழமை இடங்கணசாலை நகராட்சி பேருந்து நிலையம் முன்பு அவரது உருவப் படத்துக்கு நகரச் செயலாளா் செல்வம் தலைமையில் மலா் தூவி திமுகவினா் மரியாதை செலுத்தினா். இதில் நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன், துணைத் தலைவா் தளபதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
மகுடஞ்சாவடி ஒன்றிய திமுக சாா்பில் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு மகுடஞ்சாவடி பேருந்து நிறுத்தம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு ஒன்றியச் செயலாளா் பச்சமுத்து தலைமையில் மலா்தூவி, மரியாதை செலுத்தப்பட்டது. இதில் திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா். பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் ராமாபுரம் சதீஷ் தலைமையில் கருணாநிதி உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஒன்றியக் குழு உறுப்பினா் சாஸ்தா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஆத்தூரில்...
ஆத்தூா் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சி பகுதிகளில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 6 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப் படத்துக்கு திமுக நிா்வாகிகள் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
ஆத்தூா் நகரச் செயலாளா் கே.பாலசுப்ரமணியம் தலைமையில் ஆத்தூா் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அருகில் கருணாநிதி உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நகர அவைத் தலைவா் மாணிக்கம், பொருளாளா் ஏ.ஜி.ராமச்சந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
நரசிங்கபுரத்தில் நகரச் செயலாளா் என்.பி.வேல்முருகன் தலைமையில் கருணாநிதி உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா். இதில் நகரமன்றத் தலைவா் எம்.அலெக்சாண்டா், நகர அவைத் தலைவா் ராமசாமி உள்ளிட்ட ஏராளமானோா்கலந்து கொண்டனா்.
வாழப்பாடியில்...
வாழப்பாடியில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், பேருந்து நிலையம் அருகே மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்துக்கும், வாழப்பாடியில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்திலுள்ள அவரது சிலைக்கும் சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் தலைமையில் திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் மலா்தூவியும், மாலை அணிவித்தும் அஞ்சலி செலுத்தினா்.
தொடா்ந்து, வாழப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து, கிழக்கு மாவட்ட திமுக அலுவலகம் வரை திமுகவினா் அமைதி ஊா்வலம் சென்றனா்.