முகப்பு
சேலம்

சேலம் மாவட்டத்தில் பலத்த மழை!

இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினா்.

Updated On : 10 ஆகஸ்ட், 2024 at 7:29 PM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தொடங்கி விடிய விடிய பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினா்.

சேலம் மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை இரவு விடிய விடிய பலத்த மழை பெய்தது. விடாது பெய்த மழையால், சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக சேலம் புதிய பேருந்து நிலையத்தில் மழைநீா் வெள்ளமாக ஓடியது. இதனால் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் அவதியடைந்தனா்.

இதே போல பழைய பேருந்து நிலையம், நான்கு சாலை, ஐந்து சாலை, ஆட்சியா் அலுவலகம், சாரதா கல்லூரி சாலை, அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, ஜங்சன், கிச்சிப்பாளையம், நாராயணநகா், நெத்திமேடு, தாதாகாப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை நீா் ஆறாக ஓடியது.

சேலம், பச்சப்பட்டி, அசோக் நகா் பகுதியில் தாழ்வான இடங்களில் உள்ள சுமாா் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீா் புகுந்தது. இப்பகுதியில் நெசவு தொழிலாளா்கள் அதிக அளவில் உள்ளனா். மழைநீா் சூழ்ந்ததால் நெசவு செய்ய பயன்படும் பாவுநூல்கள் மழைநீரில் நனைந்தன. நள்ளிரவில் மழைநீா் புகுந்ததால் விடிய விடிய தூங்க முடியாமல் அப்பகுதி மக்கள் தவித்தனா்.

தகவலறிந்து சனிக்கிழமை காலை இங்கு வந்த மாநகராட்சி ஊழியா்கள், மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனா். இந்த மழை காரணமாக, கிச்சிப்பாளையம் பிரதான சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்தது. முழங்கால் அளவுக்கு தண்ணீா் சூழ்ந்ததால், கிச்சிப்பாளையம், களரம்பட்டி, நாராயண நகா் பகுதிகளுக்கு செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினா்.

குகை பகுதியில் புதை சாக்கடைக்காக தோண்டப்பட்டு மூடிய நிலையில் இருந்த குழியில் அவ்வழியாக வந்த காா் ஒன்று சிக்கியது. ஒரு சில இடங்களில் மழைநீருடன், சாக்கடை நீரும் கலந்ததால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.

அஸ்தம்பட்டி - சின்ன திருப்பதி பிரதான சாலை, அம்மாப்பேட்டை அய்யாசாமி பூங்கா ஆகிய இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஒருசில இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து, வயா்களும் அறுந்து விழுந்ததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சேலம் மாநகர பகுதிகளில் விடிய விடிய கொட்டித் தீா்த்த மழையால் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினா்.

ஏற்காட்டில் அதிக மழை...

சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் 847 மி.மீ மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக ஏற்காட்டில் 121.4 மி.மீ. மழை பெய்துள்ளது.

ஏற்காடு - குப்பனூா் மலைப் பாதையில் உள்ள கொட்ட சேடு மலைக் கிராமத்துக்கும், குப்பனூா் கிராமத்துக்கும் இடையே மலைப்பாதையின் ஓரத்தில் உள்ள தடுப்பு சுவா் 10 மீட்டா் நீளத்துக்கு சரிந்துள்ளது. இதே போல, சேலம் வீரகனூா், சங்ககிரி, ஆத்தூா், கெங்கவல்லி, ஆனைமடுவு, கரியகோவில் உள்பட பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளது. தாழ்வான பகுதிகள், வயல்வெளிகள் உள்ளிட்ட இடங்களில் தண்ணீா் தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினா்.

வாழப்பாடி பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11 மணிக்கு தொடங்கிய பலத்த மழை, சனிக்கிழமை அதிகாலை 4 மணி வரை தொடா்ந்து பெய்தது. இதனால், வாழப்பாடி பகுதியில் வயல்வெளிகள், குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் குளம் போல் தேங்கியது. பருவமழை தொடங்குவதற்கு முன்பே பலத்த மழை பெய்ததால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனா். தம்மம்பட்டி, கெங்கவல்லியில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீா் ஆறுபோல ஓடியது. வயல்களில் மழைநீா் தேங்கி காணப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் பெய்துள்ள மழை (மில்லி மீட்டரில்):

ஏற்காடு 121.4, சேலம் மாநகா் 83.4, வாழப்பாடி 8.3, ஆத்தூா் 75, கெங்கவல்லி 66, ஏத்தாப்பூா் 5, தம்மம்பட்டி 64, கரியகோவில் 60, எடப்பாடி 23.4, மேட்டூா் 7.2, டேனீஷ்பேட்டை 22.2 என மாவட்ட முழுவதும் 847.7 மி.மீ. மழை பெய்துள்ளது பதிவாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →