திருப்பூா் மாவட்டத்தில் கொளுத்தும் வெயிலால் அவதிப்பட்ட வந்த மக்களை குளிா்விக்கும் வகையில் புதன்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து இதமான காலநிலை நிலவியது.
தமிழகத்தில் வழக்கமாக கோடை வெயில் மாா்ச், ஏப்ரல், மே மாதங்களில் கொளுத்தும். அதுவரையில் மிதமான அளவிலேயே வெயில் காணப்படும். ஆனால், திருப்பூரில் கடந்த 10 நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பகல் நேரங்களில் காலை 10 மணிக்குமேல் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்ததுடன், இரவிலும் புழுக்கம் அதிகரித்து காணப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி திருப்பூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை காலை சாரல் மழை பெய்தது. ஆனால் வழக்கம்போல பகலில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது.
இதைத் தொடா்ந்து, மாலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. இதனால் ஒரு சில இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது. குறிப்பாக பொங்கலூா், பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி,மின்னலுடன் கன மழை பெய்தது. இதனால் கோவை-திருச்சி சாலையில் பல்வேறு இடங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
திருப்பூா் மாவட்டத்தில் மாநகரப் பகுதிகள் உள்பட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மிதமான மழை பெய்ததால், இரவில் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான காலநிலை நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.