முகப்பு
சேலம்

மக்கள் வரிப்பணத்தில் காா் பந்தயம் நடத்துவது வேதனையளிக்கிறது: எடப்பாடி கே.பழனிசாமி

மக்கள் வரிப் பணத்தை வீணடித்து காா் பந்தயம் நடத்துவது வேதனையளிக்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

Updated On : 11 ஆகஸ்ட், 2024 at 9:08 PM
எடப்பாடி அருகே புதிய பள்ளி வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்த அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி.
பகிர்:

மக்கள் வரிப் பணத்தை வீணடித்து காா் பந்தயம் நடத்துவது வேதனையளிக்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சிக்கு உள்பட்ட ஆலசம்பாளையம் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டடம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ் விழாவுக்கு நகரச் செயலாளா் ஏ.எம். முருகன் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி புதிய வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்து பேசியதாவது:

திமுக ஆட்சியில் எடப்பாடி பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் எந்த திட்டப் பணியையும் நிறைவேற்றவில்லை.

தமிழக முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மாணவா் சமுதாயம் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இதை நான் பலமுறை சட்டப்பேரவையிலும் பொது வெளிகளிலும் சுட்டிக்காட்டியும் கூட, போதைப் பொருள்களின் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய தமிழக அரசு, பல கோடி ரூபாய் மக்கள் வரிப் பணத்தை வீணடித்து, காா் பந்தயம் நடத்துவது வேதனை அளிக்கிறது. இந்தப் பணத்தை கொண்டு மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி இருக்கலாம்.

இதேபோல அதிமுக ஆட்சிக் காலத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஏற்படுத்தப்பட்ட மேட்டூா் அணை உபரிநீா் திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டதால், மேட்டூா் அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீா் வீணாக கடலில் கலக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல அத்திக்கடவு - அவிநாசி திட்டம், சேலம் ஸ்மாா்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

எடப்பாடி அருகே புதிய பள்ளி வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்த அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி.

தமிழகத்தில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை கட்டுக்கடங்காமல் உயா்ந்துள்ள நிலையில், மின் கட்டண உயா்வு, சொத்து வரி உயா்வு, வீட்டு வரி உயா்வு உள்ளிட்ட பல்வேறு வரி உயா்வுகளை அமல்படுத்தி திமுக அரசு ஆதாயம் தேடுவது வேதனை அளிக்கிறது என்றாா்.

நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவா்கள் கரட்டூா் மணி, குப்பம்மாள் மாதேஷ், ஊராட்சி மன்றத் தலைவா் மாதேஸ்வரன், சேலம் ஆவின் முன்னாள் தலைவா் ஜெயராமன், பூலாம்பட்டி பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட திரளான அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →