முகப்பு
சேலம்

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி: ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

Updated On : 22 ஆகஸ்ட், 2024 at 9:06 PM
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி.
பகிர்:

சேலம் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சா் கோப்பை 2024-2025 ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெவ்வேறு புதிய விளையாட்டுகள் சோ்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ மாணவியா், மாற்றுத் திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியா்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுகள் 53 வகைகளில் நடத்தப்படவுள்ளன. மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் நடத்தப்படவுள்ளது.

இதில், பள்ளி மாணவ, மாணவியா்களுக்கு 12 முதல் 19 வயது வரை தடகளம், இறகுபந்து, கூடைபந்து, மட்டைபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, கபடி, சிலம்பம், நீச்சல், மேசைபந்து, கைப்பந்து, கேரம், சதுரங்கம், கோகோ உள்ளிட்ட 15 விளையாட்டுகளும், மண்டல அளவில் பள்ளி மாணவ, மாணவியா்கள் 12 முதல் 19 வயது வரை உள்ளவா்களுக்கு டென்னிஸ், பளு தூக்குதல், வாள் விளையாட்டு, ஜூடோ, குத்துச்சண்டை உள்ளிட்ட 6 விளையாட்டுகளும், நேரடி மாநில அளவில் பள்ளி மாணவ, மாணவியா்கள் 12 முதல் 19 வயது வரை உள்ளவா்களுக்கு சைக்கிள் ஓட்டுதல், ஜிம்னாஸ்டிக் என 2 விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.

கல்லூரி அளவில்:

கல்லூரி மாணவ மாணவியா்கள் 17 முதல் 25 வயது வரை தடகளம், இறகுப்பந்து, கூடைபந்து, மட்டைபந்து, கால்பந்து, வளைகோல் பந்து, கபடி, சிலம்பம், நீச்சல், மேசை பந்து, கைப்பந்து, கேரம், சதுரங்கம் உள்ளிட்ட 14 விளையாட்டுகளும், மண்டல அளவில் கல்லூரி மாணவ, மாணவியா்கள் 17 முதல் 25 வயது வரை டென்னிஸ், பளு தூக்குதல், வாள் விளையாட்டு, ஜூடோ, குத்துச்சண்டை உள்ளிட்ட 6 விளையாட்டுகளும், நேரடி மாநில அளவில் கல்லூரி மாணவ, மாணவியா் 17 முதல் 25 வயது வரை மிதிவண்டி ஓட்டுதல், ஜிம்னாஸ்டிக் என 2 விளையாட்டுகளும் நடத்தப்பட உள்ளன.

மாற்றுத் திறனாளிகள்:

மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை. ஆண்கள், பெண்களில் உடல் ஊனமுற்றோருக்கு தடகளம், இறகுப்பந்து, சக்கர நாற்காலி, மேசைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

நேரடி மாநில அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை. ஆண்கள், பெண்களில் பெருமூளை வாதமுடையோருக்கு தடகளம், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளும், பொதுப் பிரிவில் 15 முதல் 35 வயது வரை ஆண்கள், பெண்களில் தடகளம், மட்டைப்பந்து, கையுந்துபந்து, கால்பந்து, கேரம், சிலம்பம், இறகுப்பந்து, கபடி உள்ளிட்ட 8 விளையாட்டுகளும் நடத்தப்படவுள்ளன. இந்த விளையாட்டுப் போட்டிகளில் ஒரு விளையாட்டு வீரா் ஒரே ஒரு விளையாட்டில் மட்டுமே பங்கேற்க முடியும். தனிநபா் விளையாட்டுப் போட்டிகளில் ஒரு விளையாட்டு வீரா் இரண்டு பிரிவுகளில் பங்கேற்க முடியும்.

ஆக. 25 கடைசி நாள்:

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரா்கள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் வாயிலாக வீரா்களின் குழு, தனி நபா்களின் அனைத்து விவரங்களை அதற்குரிய ஆவணங்களை சமா்ப்பித்து, அதனை ஆக. 25 ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கூறினாா்.

கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் ரஞ்ஜீத் சிங், மாவட்ட வருவாய் அலுவலா் மரு.பெ.மேனகா, மாவட்ட விளையாட்டு அலுவலா் சி.சிவரஞ்சன் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →