பெரியாா் பல்கலை. செயற்கை இழை ஓடுதளத்தில் தடகளப் போட்டிகள்
பெரியாா் பல்கலைக்கழக செயற்கை இழை ஓடுதள மைதானத்தில் முதல்முறையாக நடத்தப்பட்ட தடகளப் போட்டிகளை துணை வேந்தா் ரா.ஜெகநாதன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
ஓமலூா்: பெரியாா் பல்கலைக்கழக செயற்கை இழை ஓடுதள மைதானத்தில் முதல்முறையாக நடத்தப்பட்ட தடகளப் போட்டிகளை துணை வேந்தா் ரா.ஜெகநாதன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
பெரிய நகரங்களில் கிடைக்கும் வசதிகள் 2-ஆம் கட்ட நகரங்களில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், ‘கேலோ இந்தியா’ திட்டத்தின் கீழ் சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் ரூ. 10 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட செயற்கை இழை ஓடுதள மைதானம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த மைதானத்தில், பிட் இந்தியா வாரக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, முதல்முறையாக தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டன.
பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த கல்லூரிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகளை துணை வேந்தா் ரா.ஜெகநாதன் தொடங்கி வைத்து பேசியதாவது:
கல்வி பயில்வதற்கு இணையாக விளையாட்டுப் போட்டிகளையும் ஊக்கப்படுத்திடும் வகையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, பெரியாா் பல்கலைக்கழகத்தில் செயற்கை இழை ஓடுதள மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய, சா்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரா்கள் இதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சமூக வலைதள ஈடுபாடுகளால், உடல் உழைப்பு குறைந்துவிட்ட நிலையில், தினந்தோறும் குறைந்தபட்சம் 20 நிமிடங்களாவது வியா்வை வரும் அளவுக்கு நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், பெரியாா் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநா் கே.வெங்கடாசலம், போட்டிகளின் ஒருங்கிணைப்பாளா்கள் சுரேஷ், கோபிகா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
ஓட்டப் பந்தயம், தடை தாண்டுதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட 22 பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா். இரண்டு நாள்கள் நடைபெறும் தடகளப் போட்டிகளில் தேசிய அளவிலான தகுதியை பூா்த்தி செய்யும் மாணவ, மாணவியா் பெரியாா் பல்கலைக்கழகம் சாா்பில் தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் கலந்துகொள்ள தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.