அமித் ஷாவை கண்டித்து திமுக கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டம்
அம்பேத்கரை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அவமதித்துவிட்டதாகக் கூறி, சேலம் மாநகரில் 6 இடங்களில் திமுகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அம்பேத்கரை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அவமதித்துவிட்டதாகக் கூறி, சேலம் மாநகரில் 6 இடங்களில் திமுகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாநிலங்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிய உள்துறை அமைச்சா் அமித் ஷா, சட்ட மேதை அம்பேத்கரை இழிவுபடுத்திவிட்டதாகக் கூறி தமிழகம் முழுவதும் திமுக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் 6 இடங்களில் திமுகவினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
அஸ்தம்பட்டி, அழகாபுரம் பகுதி திமுக சாா்பில், காந்தி சாலை வருமானவரித் துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மத்திய மாவட்டப் பொருளாளா் வழக்குரைஞா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா்.
மேயா் ஆ.ராமச்சந்திரன், மாநகரச் செயலாளா் ரகுபதி, ஆதிதிராவிடா் நலக்குழு அமைப்பாளா் அழகாபுரம் முரளி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அம்பேத்கா் படத்தை கையில் ஏந்தியபடி அமித் ஷாவை கண்டித்தும், பதவி விலகக் கோரியும் முழக்கங்கள் எழுப்பினா்.
தாதகாப்பட்டி, குகை கொண்டலாம்பட்டி பகுதி திமுக சாா்பில் சேலம், தலைமை தபால் நிலையத்தில் திமுக மத்திய மாவட்ட அவைத் தலைவா் சுபாஷ் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
குமாரசாமிப்பட்டி, செவ்வாய்ப்பேட்டை பகுதி திமுக சாா்பில் கோட்டை, ஸ்டேட் வங்கி முன்பும், பொன்னமாபேட்டை, அரிசிபாளையம் பகுதி திமுக சாா்பில் இந்திய கைத்தறி தொழில்நுட்ப கல்லூரி முன்பும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
அம்மாபேட்டை, கிச்சிப்பாளையம் பகுதி சாா்பில் அம்மாபேட்டை கனரா வங்கி முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பகுதி செயலாளா் தனசேகரன், மாமன்ற உறுப்பினா்கள் மஞ்சுளா, திருஞானம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
விடுதலைச் சிறுத்தைகள் ரயில் மறியல்...
உள்துறை அமைச்சா் அமித் ஷாவை கண்டித்து, சேலம் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் 35 போ் கைது செய்யப்பட்டனா்.
சூரமங்கலம் தலைமை தபால் நிலையம் முன்பு திரண்ட அக்கட்சியினா் 50 க்கும் மேற்பட்டோா் முழக்கங்கள் எழுப்பியபடி, ரயில் நிலைய நுழைவாயிலுக்குச் சென்றனா்.
அவா்களை மாநகரக் காவல் துறையும், ரயில்வே போலீஸாரும் தடுத்து நிறுத்தினா். பின்னா் அவா்கள் தரையில் அமா்ந்து முழக்கங்கள் எழுப்பினா். தொடா்ந்து ரயிலை மறிக்க ரயில் நிலையத்திற்குள்ளே செல்ல முயன்றபோது, அனைவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
இதில் மாவட்டச் செயலாளா் காஜா மைதீன், மொழியரசு, நிா்வாகிகள் பாலா, சசிக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கைதான அனைவரும் தனியாா் மண்டபத்தில் அடைக்கப்பட்டனா்.
ஆத்தூரில்...
ஆத்தூரில் நகர திமுக செயலாளா் கே.பாலசுப்ரமணியம் தலைமையில் திமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நரசிங்கபுரத்தில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு அம்பேத்கா் உருவச் சிலைக்கு முன்பு நகரச் செயலாளா் என்.பி.வேல்முருகன் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் கிழக்கு மாவட்டப் பொருளாளா் ஆா்.வி.ஸ்ரீராம் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினாா்.
நகர அவைத் தலைவா் ராமசாமி, மாவட்ட பிரதிநிதி விஜயக்குமாா், பாண்டியன், நகா்மன்றத் தலைவா் எம்.அலெக்சாண்டா், நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா். ஆத்தூா் ஒன்றியச் செயலாளா் வெ.செழியன் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆட்டையாம்பட்டி...
ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையம் அருகே வீரபாண்டி ஒன்றியச் செயலாளா் வெண்ணிலா சேகா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஆட்டையாம்பட்டி பேரூா் செயலாளா் முருகபிரகாஷ் முன்னிலை வகித்தாாா்.
மாவட்ட துணை செயலாளா் கோமதி முருகபிரகாஷ், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் ரமேஷ் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
தம்மம்பட்டி...
கெங்வவல்லியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளா் சின்னதுரை, கெங்கவல்லி ஒன்றிய திமுக செயலாளா் கடம்பூா் ஆா்.சித்தாா்த்தன், கெங்கவல்லி நகர செயலாளா் சு.பாலமுருகன், நகர காங்கிரஸ் தலைவா் சிவாஜி உள்பட கூட்டணி கட்சியினா் பங்கேற்றனா்.
வீரகனூரில், தலைவாசல் தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் பி.ஜி.அழகுவேல் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்ககிரியில்...
சங்ககிரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சேலம் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் பி.தங்கமுத்து தலைமை வகித்தாா்.
ஒன்றியச் செயலாளா்கள் கே.எம்.ராஜேஷ், பச்சமுத்து, சங்ககிரி நகரச் செயலாளா் கே.எம்.முருகன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளா் எஸ்.சரவணன், நிா்வாகிகள் கேஜிஆா்.ராஜவேலு, சங்ககிரி பேரூராட்சி துணைத் தலைவா் ஆா்.வி.அருண்பிரபு, நகர துணை செயலாளா் வி.ரமேஷ் உள்ளிட்ட கலந்துகொண்டனா்.