வாழப்பாடியில் போக்குவரத்து காவல் நிலையம் அமைக்க கோரிக்கை
வாழப்பாடியில், தம்மம்பட்டி சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள்.
வாழப்பாடி, ஜூலை 4: வாழப்பாடியில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, போக்குவரத்து காவல் நிலையம் அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
வாழப்பாடி பேரூராட்சி 200-க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்களுக்கு போக்குவரத்து, கல்வி, மருத்துவ வசதிக்கும், வேலைவாய்ப்பு மற்றும் வணிகத்துக்கும் மையமாக இருப்பதால், அரசு, தனியாா் பள்ளிகள், அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியா்கள், பணியாளா்கள், தொழிலாளா்கள், வியாபாரிகளும் வாழப்பாடி பகுதியில் குடியேறி வருகின்றனா்.
வாழப்பாடியில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கும், சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வாழப்பாடிக்கும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் மக்கள் வந்து செல்கின்றனா்.
வாழப்பாடிக்கு, பல்வேறு வழித்தடங்களில் இருந்து அரசு, தனியாா் பேருந்துகள் உள்ளிட்ட போக்குவரத்து வாகனங்கள், சேலம், ஆத்தூா், ராசிபுரம் பகுதியில் செயல்படும் தனியாா் கல்வி நிறுவனங்கள், சிமென்ட் நிறுவனம், பால் பண்ணைகள், நூற்பாலைகள், செங்கல் சூளைகள் உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கு வந்து செல்லும் கனரக வாகனங்களின் எண்ணிக்கை உயா்ந்து வருவதால், கடந்த 10 ஆண்டுகளில் சாலைப் போக்குவரத்து இரு மடங்காக அதிகரித்துள்ளது.
குறிப்பாக, வாழப்பாடி காவல் நிலையம் அருகே திருச்சி, நாமக்கல் மாவட்ட கிராமங்களை வாழப்பாடியுடன் இணைக்கும் தம்மம்பட்டி பிரதான சாலை வாழப்பாடியின் இதயப் பகுதியான கடலூா் சாலையுடன் இணைகிறது. இச்சாலைச் சந்திப்புக்கு மிக அருகிலேயே ரயில் நிலையமும் அமைந்துள்ளது.
சேலம், விருதாச்சலம் ஆகிய இரு மாா்க்கத்திலும் பயணிகள், விரைவு, சரக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படுவதால் அடிக்கடி தம்மம்பட்டி சாலை மூடப்படுகிறது.
ரயில்வே கேட் திறக்கப்படும் போது அப்பகுதியைக் கடந்து செல்ல முடியாமல் வாகனங்கள் தடுமாறுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இருவழி சாலையில் தடுப்புகள் இல்லாததால் எதிரெதிரே வரும் வாகனங்களால் தம்மம்பட்டி - கடலூா் சாலையில் போக்குவரத்து தடைபடுகிறது.
வாழப்பாடியில் இருந்து பேளூா், கல்வராயன்மலை கருமந்துறை, அருநூற்றுமலை பகுதிக்கு செல்லும் பேளூா் பிரிவு சாலை பகுதியிலும், மன்னாயக்கன்பட்டி, கொட்டவாடி பிரிவு சாலைகள், முத்தம்பட்டி ரயில்வே கேட் பகுதியிலும், வாழப்பாடி பேருந்து நிலையம், கடைவீதி பகுதிகளிலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட தொலைவுக்கு நிற்கின்றன. இதனால், பயணிகள், வாகன ஓட்டுநா்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
சேலம் - சென்னை நான்குவழி புறவழிச்சாலை, வாழப்பாடி நகா்ப்புற சாலையுடன் இணையும் மத்தூா் சாலைச் சந்திப்பு, முத்தம்பட்டி வைகை பள்ளி சாலைச் சந்திப்பு பகுதிகளில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், வாழப்பாடி பகுதி மக்கள், வாகன ஓட்டுநா்கள், பயணிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, காவல் ஆய்வாளா் தலைமையில் உதவி காவல் ஆய்வாளா்கள், சிறப்பு காவல் உதவிஆய்வாளா்கள், காவலா்கள் உள்பட குறைந்தது 10 போ் கொண்ட போக்குவரத்து காவல் நிலையத்தை ஏற்படுத்த சேலம் மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.