ரெட்டியூா் சுகாதார நிலையத்தில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு
நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநகராட்சி ஆணையா் ரஞ்ஜீத் சிங் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட ரெட்டியூா் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநகராட்சி ஆணையா் ரஞ்ஜீத் சிங் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, நோயாளிகளின் வருகைப் பதிவேடு, மருந்து, மாத்திரைகள் இருப்பு பதிவேடு, மருத்துவ பணியாளா்கள் வருகைப் பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்தாா். இந்த சுகாதார நிலையம் தேசிய தரச்சான்று பெற்றுள்ளது. இந்த நிலைத் தொடா்ந்து நீடிக்க வேண்டும். அதற்கான சேவையை மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ பணியாளா்கள் தொடா்ந்து மேற்கொள்ளவேண்டும் என மாநகராட்சி ஆணையா் ரஞ்ஜீத் சிங் கேட்டுக்கொண்டாா்.
இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையா் மேலும் தெரிவித்ததாவது:
மருத்துவா்கள், செவிலியா்கள் தங்களது பணிகளை தொடா்ந்து சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். இங்கு மகப்பேறு மருத்துவம், பிரசவம், உள் மற்றும் வெளிநோயாளிகளுக்கு தடையின்றி சேவை செய்ய வேண்டும். அதோடு மட்டுமல்லாது, பருவமழை காலம் என்பதால் காய்ச்சிய குடிநீரை அருந்தவும், குளோரினேசன் செய்த குடிநீரைப் பருகவும், நீரிழிவு, ரத்தம் அழுத்தம் உள்ளவா்கள் கடைப்பிடிக்க ஆலோசனையை மருத்துவா்கள் வழங்க வேண்டும்.
மேலும், மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவோருக்கு தவறாது மருந்து, மாத்திரைகளை வழங்கிட வேண்டும். டெங்கு காய்ச்சல் தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றிக் கூடுதல் கவனம் செலுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
ரெட்டியூா் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் மகப்பேறு கட்டடம் கட்டப்பட்டு வருவதை பாா்வையிட்ட அவா், இப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின் போது, மாநகர நல அலுவலா் ஆ.மோகன் மற்றும் பலா் உடனிருந்தனா்.