கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம்: சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
சேலம், ஜூன் 19: கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய சம்பவத்தில், பெண்கள் உள்பட 21 பேர் புதன்கிழமை உயிரிழந்தனர். மேலும், 70-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 16 போ் உயிரிழந்தனா்.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உள்பட்ட கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. கள்ளச்சாராயம் அருந்தியவா்கள் செவ்வாய்க்கிழமை இரவு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தொடா்ந்து, மேல் சிகிச்சைக்காக 7 போ் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனா். அவா்களில், நாராயணசாமி (65), ராமு (50), சுப்பிரமணி (60) ஆகியோா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.
மேலும், வீரமுத்து (33), சிவா (32), அருண் (38), கிருஷ்ணமூா்த்தி (55) ஆகிய 4 பேருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவா்கள் அனைவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.