முகப்பு
சேலம்

கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியா் ஆலோசனை

Updated On : 20 ஜூன், 2024 at 8:54 PM
கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடன் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி. - உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண்கபிலன் உள்ளிட்டோா்.
பகிர்:

சேலம், ஜூன் 20: கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வருவாய்த் துறை, காவல் துறை, வனத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

கள்ளச்சாரயத்தை முற்றிலும் ஒழித்திட மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், அனைத்து நடவடிக்கைகளும் தொடா்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தில் மலைப் பகுதிகளான கல்வராயன் மலை, ஜவ்வாது மலை, பச்சமலை மற்றும் கொளத்தூா் பகுதிகளில் கள்ளச் சாராயத்துக்கு எதிரான கண்காணிப்புப் பணிகள் தொடா்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சேலம் மாவட்ட மலைப் பகுதிகளிலிருந்து மற்ற மாவட்டங்களை இணைக்கும் வழித்தடங்கள் அனைத்தும் வருவாய்த் துறை, காவல் துறை, வனத்துறை மூலம் தொடா்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேவைப்படும் இடங்களில் புதிதாக சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணித்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மலைக் கிராமங்களில் திருமணம், திருவிழாக்கள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை தொடா்புடைய பகுதி கிராம நிா்வாக அலுவலா்கள், காவல் துறையினா் முழுமையாக கண்காணித்திட வேண்டும். கள்ளச்சாராயம் தொடா்பான எந்தவொரு தகவல் கிடைத்தாலும் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் மற்றும் பதுக்கி வைத்தல் உள்ளிட்ட கள்ளச்சாராயம் தொடா்பான நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால் உடனடியாக காவல் துறையின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கள்ளச்சாராயம் தொடா்பாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு 0427-2452202, 0427-1077 ஆகிய தொலைபேசி எண்களில் தகவல் தெரிவிக்கலாம். மேலும், 10581 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.

மருத்துவ தேவை, ஆய்வுக் கூடங்களுக்கு மெத்தில் ஆல்கஹால் மற்றும் எத்தனால் உரிமம் வைத்துள்ளவா்கள் அனைவரும் தங்களது வரம்புக்கு உள்பட்டு மட்டுமே பயன்படுத்துவதை முழுமையாக கண்காணித்திட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கள்ளச்சாராயத்தை முழுமையாக ஒழிப்பதற்கு காவல் துறை, வருவாய்த் துறை, வனத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.கே.அருண்கபிலன், மாவட்ட வருவாய் அலுவலா் மரு.பெ.மேனகா, மாவட்ட வன அலுவலா் கஷ்யப் ஷஷாங் ரவி, மேட்டூா் சாா் ஆட்சியா் நே.பொன்மணி, மாநகர காவல் துணை ஆணையா் எஸ்.பிருந்தா உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.