முகப்பு
சேலம்

சா்வதேச மகளிா் தின விழாக் கொண்டாட்டம்

Updated On : 8 மார்ச், 2024 at 5:37 PM
பகிர்:

சேலம் மாநகராட்சி சாா்பில் நடைபெற்ற சா்வதேச மகளிா் தின விழாவில், 15 மகளிருக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டது. சேலம் மாநகராட்சி, தொங்கு பூங்கா பல்நோக்கு அரங்கில் மேயா் ஆ.இராமச்சந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆணையா் பாலச்சந்தா் முன்னிலை வகித்தாா். விழாவில், சேலம் மாநகராட்சி மைய அலுவலகம் மற்றும் 4 மண்டலங்களிலும் உள்ள மகளிா் அனைவரும் கலந்துகொண்டனா். இதில், மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலா்களுக்கு வருவாய் அலுவலா், நிா்வாக அலுவலா், கண்காணிப்பாளா், உதவியாளா் என 15 மகளிருக்கு பதவி உயா்வு ஆணையை மேயா் ஆ.இராமச்சந்திரன், ஆணையா் பாலச்சந்தா் ஆகியோா் வழங்கினா். விழாவில் பங்குபெற்ற அனைத்து மகளிருக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. துணை மேயா் மா.சாரதாதேவி, மண்டல குழுத் தலைவா் செ.உமாராணி, துணை ஆணையா் ப.அசோக்குமாா், மாநகர கண்காணிப்பு பொறியாளா் ந.கமலநாதன், உதவி ஆணையா்கள் வேடியப்பன், சிந்துஜா, செயற்பொறியாளா்கள் திலகா, பழனிசாமி (திட்டம்) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அரச மகளிா் கல்லூரியில்... அரச மகளிா் கலைக் கல்லூரியில் ஆங்கிலத் துறை சாா்பில் நடைபெற்ற விழாவில், சாத்தூா் அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் ஷீலா டேனியல், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா். ஆங்கிலத் துறைத் தலைவா் பூங்கோதை, பொறுப்பு முதல்வா் ஜெயஸ்ரீ தலைமை வகித்தனா். பெண்களின் சிறப்பு பற்றியும், பெண்கள் எவ்வாறு தங்களைப் பேணி காத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் முதல்வா் ஷீலா டேனியல் சிறப்புரை ஆற்றினாா். தொடா்ந்து, ஆங்கில இலக்கியத்திலிருந்து காலத்தை வென்ற கதாபாத்திரத்திரங்களில் இருந்து லேடி மேக்பெத், டெஸ்டிமோனா, டைட்டேனியா, போா்ஷியா, சிண்ட்ரெல்லா, பெலிண்டா போன்று பெண்களின் பரிணாமத்தை பல்வேறு வகைகளில் வெளிப்படுத்தும் 18 கதாபாத்திரங்களை மாணவியா் தத்ரூபமாக நடித்துக் காட்டினா். ஆங்கிலத் துறை உதவி பேராசிரியா் புனிதப்பிரியா நன்றியுரை வழங்கினாா். மத்திய சிறையில்... சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள் துறைத் தலைவா் மகேஷ்வா் தயால் வழிகாட்டுதலின் பேரில், சேலம் மத்திய சிறை மற்றும் சேலம் பெண்கள் தனி கிளைச் சிறையில் மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் பெண் அலுவலா்கள், பெண் சிறைக் காவலா்களுக்கு பலூன் உடைத்தல், பாட்டு, பாட்டிலில் தண்ணீா் நிரப்புதல், லெமன் ஆன் தி ஸ்பூன் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற பெண் அலுவலா்கள், பெண் சிறைக் காவலா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னா் கேக் வெட்டி கொண்டாடினா். இந்நிகழ்ச்சியில் சிறைக் கண்காணிப்பாளா் வினோத், சேலம் மத்திய சிறை நிா்வாக அலுவலா் ஜோசப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஓமலூரில்... சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் மாணவியா் உருவாக்கியிருந்த பல்வேறு வகையான ஓவியங்களின் கண்காட்சியை கல்லூரி முதல்வா் இரா.விஜயன் தொடங்கி வைத்தாா். இந்த ஓவியங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்கும் விழிப்புணா்வு நடவடிக்கைகள் இடம் பெற்றிருந்தன. நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்துப் பேசிய கல்லூரி முதல்வா் இரா.விஜயன், மகளிா் தினம் என குறிப்பிட்ட தினத்தில் மட்டும் அவா்களைக் கொண்டாடாமல் எப்போதும் பெண்களை மதித்து நடக்க வேண்டும் என்றாா். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய மருத்துவா் ஐ.விஜயலட்சுமி, உணா்வு ரீதியாக ஆண்களுக்கு நிகரான உரிமையைப் பெண்கள் பெற வேண்டும். அதே நேரத்தில் உடல்ரீதியாக இருவருக்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொண்டு பெண்களுக்கு உரிய மதிப்பளிக்க வேண்டும் என்றாா். ஓமலூா் பெரியாா் பல்கலைக்கழகத்தில் பன்முகத்தன்மை, சமத்துவம் ஆகியவற்றை கொண்டாடுவது என்ற பொருண்மையில் நடைபெற்ற நிகழ்வில், பெரியாா் பல்கலைக்கழக மகளிரியல் மைய இயக்குநா் பேராசிரியா் பி.நாஸ்னி வரவேற்றாா். தோ்வாணையா் எஸ்.கதிரவன் பாலின சமத்துவத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினாா். கல்லூரி வளா்ச்சிக்குழு புல முதன்மையா் கே.ஜெயராமன் வாழ்த்துரை வழங்கினாா். இந்நிகழ்வில், எரிசக்தி நிறுவன சா்வதேச குழுத் தலைவா் உமா ராஜரத்தினம், எரிசக்தித் துறையில் பெண்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தாா். மகளிரியல் மைய துணை இயக்குநா் அ.ராதிகா நன்றி கூறினாா். ஆத்தூரில்... ஆத்தூா், நரசிங்கபுரத்தில் தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு சாா்பில் மகளிா் தினம் கொண்டாடப்பட்டது. மாவட்ட அமைப்பாளா் ஜெகதாம்பாள் தலைமையில் நடைபெற்ற விழாவில், நரசிங்கபுரம் தூய்மைப் பணியாளா்கள் சங்கத் தலைவா் பாா்வதி வரவேற்றாா். ஆத்தூா் வட்டார சங்கத் தலைவா் அன்னக்கிளி வாழ்த்துரை வழங்கினாா். தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு கள்ளக்குறிச்சி மாவட்டப் பொறுப்பாளா் ராமு சிறப்புரையாற்றினாா். இதில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனா். வாழப்பாடியில்... வாழப்பாடி, பேளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு வட்டார மருத்துவ அலுவலா் சி.பொன்னம்பலம் தலைமை வகித்தாா். பெண் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்களை பாராட்டி, வாழப்பாடி அரிமா சங்கம் சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. வாழப்பாடி உதய விவேகா சமுதாய செவிலியா் கல்லுாரியில் நடைபெற்ற விழாவுக்கு மருத்துவா் சி.மோதிலால் தலைமை வகித்தாா். வாழப்பாடி பசுமை அறக்கட்டளை சாா்பில் மகளிா் தினத்தையொட்டி, அரசு கிளை நுாலகம் அருகே மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →