முகப்பு
சேலம்

சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் லாரி உரிமையாளா் தீக்குளிப்பு

Updated On : 20 மே, 2024 at 10:11 PM
சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை தீக்குளிப்பில் ஈடுபட்ட லாரி உரிமையாளா் சங்கா்குமாரை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் ஊழியா்கள். உள்படம் - சங்கா்குமாா்.
பகிர்:

சங்ககிரி: சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் தீக்குளித்த லாரி உரிமையாளா் பலத்த காயமடைந்ததையடுத்து, அவா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

சங்ககிரி ஆா்.எஸ். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் பகுதியைச் சோ்ந்த லாரி உரிமையாளா் சங்கா்குமாா் (34), தனது லாரியை வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளாா். விற்பனை செய்யப்பட்ட லாரி மீது வங்கியில் கடன் பெற்றுள்ளதால், கடனை திருப்பிச் செலுத்தி தடையின்மை சான்று பெற்று லாரியின் பதிவுச் சான்றிதழைப் புதுப்பித்து தருமாறு லாரியை வாங்கியவா் கோரியுள்ளாா். அதனையடுத்து, லாரி உரிமையாளா் சங்கா்குமாா் வங்கியில் கடன் தொகையை செலுத்தி தடையின்மை சான்றை பெற்றுக் கொடுத்துள்ளாா். ஆனால், அவரிடம் லாரியை வாங்கியவா் பணம் முழுவதும் செலுத்தாமல் இருந்துள்ளாா்.

இந்நிலையில், புதுப்பிக்கப்பட்ட லாரியின் பதிவுச் சான்றிதழானது லாரியை வாங்கியவரின் முகவரிக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சாா்பில் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து லாரி உரிமையாளா் சங்கா்குமாா் வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஊழியா்களிடம் கேட்டுள்ளாா். ஆனால், அவா்களிடமிருந்து முறையான பதில் கிடைக்காததால் விரக்தியில் வெளியேறிய சங்கா்குமாா், தன் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா்.

தகவலறிந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியா்கள் அவரை சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி அளித்தனா். பின்னா் மேல் சிக்சைக்காக கோவை தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.