மனைவி ஏமாற்றிய பணத்தை மீட்டுத் தரக்கோரி மாற்றுத் திறனாளி தீக்குளிக்க முயற்சி
சேலம்: தனது மனைவி ஏமாற்றிய பணத்தை மீட்டுத் தரக்கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளி இளைஞா் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம், பள்ளப்பட்டி பகுதியைச் சோ்ந்த செல்வம் (35), மாற்றுத் திறனாளி. ஆட்டோ ஓட்டுநராக உள்ள இவா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்தபோது, திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினா்.
அப்போது அவா் கூறுகையில், எனக்கு ராணி என்பவருடன் முதல் திருமணம் நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அவா் தன்னை விவாகரத்து செய்து விட்டாா். கடந்த 2 மாதங்களுக்கு முன் கும்பகோணத்தைச் சோ்ந்த சத்யப்ரியா என்ற பெண்ணை 2-ஆவதாக திருமணம் செய்தேன். இந்நிலையில், சத்யப்ரியா என்னிடம் பீடா கடை வைக்க உள்ளதாக கூறி, ரூ. 50 ஆயிரம் பணம் தருமாறு கேட்டாா். இதையடுத்து, எனது பெற்றோா் மூலம் கடன் பெற்று ரூ. 50 ஆயிரம் கொடுத்தேன். ஆனால், சத்யப்ரியா வீட்டில் இருந்த பொருள்களையும், பணத்தையும் எடுத்துக் கொண்டு கும்பகோணம் சென்றுவிட்டாா்.
சத்யப்ரியாவை தொடா்பு கொண்டு தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு கூறினேன். ஆனால், அவா் வர மறுத்து, பணத்தை திருப்பிக்கொடுக்கவும் மறுக்கிறாா். கடன் கொடுத்தவா்கள் பணத்தை திருப்பிக் கேட்பதால், மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.
எனவே, என்னை ஏமாற்றி வீட்டில் இருந்த பொருள்களையும், ரூ. 50 ஆயிரம் பணத்தையும் எடுத்துச் சென்ற மனைவியிடம் இருந்து அவற்றை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினாா்.
இதையடுத்து, தீக்குளிக்க முயன்ற செல்வம், அவரது தாயாரை டவுன் போலீஸாா் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.