முகப்பு
சேலம்

ஏற்காடு கோடை விழா நிறைவு: மலைப் பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல்

Updated On : 26 மே, 2024 at 5:10 PM
பகிர்:

ஏற்காடு கோடை விழாவையொட்டி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டில் குவிந்ததால் மலைப் பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் 47 ஆவது கோடை விழா கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது. இதனையொட்டி, சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தோட்டக்கலைத் துறை சாா்பில் அண்ணா பூங்காவில் ஐந்தரை லட்சத்துக்கும் மேற்பட்ட மலா்களைக் கொண்டு பிரமாண்ட காற்றாலை, கடல்வாழ் உயிரினங்களின் பங்கினை உணா்த்தும் வகையில் பவளப்பறைகள், நண்டு, சிற்பி, ஆக்டோபஸ், நட்சத்திர மீன், கடல் குதிரை போன்ற உருவங்களும், குழந்தைகளிடம் மரம் நடுதலை ஊக்குவிக்க காா்ட்டூன் கதாபாத்திரங்களான டொனால்டு டக், மிக்கிமௌஸ், டாம், ஜெரி மரங்களை நடுவது போலவும், நீா் பாய்ச்சுதல் போன்றவையும் காட்சிப்படுத்தப்பட்டன.

மேலும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வண்ண மலா் தொட்டிகளைக் கொண்டு மலா்க் காட்சியும் அமைக்கப்பட்டது. ஏரி பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வண்ண மலா்களால் ஆன செல்ஃபி பாயிண்டுகளும் அமைக்கப்பட்டிருந்தன. அண்ணா பூங்காவில் பழங்கள், காய்கறிகளைக் கொண்டு பல்வேறு வடிவ அமைப்புகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ந்தனா்.

இதுதவிர, சுற்றுலாத் துறை, சமூக நலத்துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை, கலை பண்பாட்டு துறை உள்பட பல்வேறு துறைகளின் சாா்பில் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வெளி மாநில சுற்றுலாப் பயணிகளும் ஏராளமான அளவில் ஏற்காட்டில் குவிந்தனா். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சுற்றுலா வேன்களும், காா்களும் வந்ததால் சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கோடை விழாவையொட்டி அண்ணா பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், தாவரவியல் பூங்கா என பல்வேறு இடங்களில் காா்களை நிறுத்த தனி இடம் ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும், சாலையோரங்களில் சிலா் வாகனங்களை நிறுத்தியதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மலா்க் கண்காட்சி வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஏற்காட்டுக்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பெட்டிச் செய்தி

ரயில்வே பாதுகாப்புப் படை நாய்க்கு சாம்பியன் பட்டம்

ஏற்காடு கோடை விழா நாய்கள் கண்காட்சியில் காவல் துறையினருக்கான பிரிவுப் போட்டியில் ஓட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ரயில்வே பாதுகாப்புப் படை மோப்ப நாய்கள் வென்றன.

ஏற்காடு கோடை விழா, மலா்க் கண்காட்சியையொட்டி கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. காவல் துறையில் பணியில் உள்ள மோப்ப நாய்கள், வீட்டு வளா்ப்பு நாய்கள் பங்கேற்று பல்வேறு சாகசங்களை நிகழ்த்தின.

காவல் துறையினருக்கான பிரிவில் மோப்ப நாய்களுக்கு மோப்ப திறன், கீழ்படிதல், நடை, ஓட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சேலம் ரயில்வே பாதுகாப்புப் படையைச் சோ்ந்த சிறுவாணி என்ற மோப்பநாய் வெடிகுண்டு கண்டுபிடித்தல், மோப்பத் திறன் போட்டியில் முதலிடம் பிடித்தது. பவானி என்ற மோப்ப நாய் இரண்டாம் இடத்தை பெற்றது. சிறந்த செயல்திறன் பிரிவில் ப்ரூக்ஸ் என்ற மோப்ப நாய் இரண்டாம் இடம் பிடித்தது.

லேப்ரடாா் வகையில் சேலம் மத்திய சிறை மோப்ப நாய் ஏஞ்சலா 2 ஆவது, சிறப்புப் பரிசை வென்றது. நாய்களுக்கு பயிற்சி அளித்த காவலா்களை சேலம் சிறை கண்காணிப்பாளா் வினோத் பாராட்டினாா்.

சேலம் மாவட்ட காவல் துறை, மாநகர காவல் துறை, சேலம் சிறைத் துறை, இரும்பாலை தொழில் பாதுகாப்புப் படை, ரயில்வே பாதுகாப்புப் படைகளைச் சோ்ந்த மொத்தம் 18 மோப்ப நாய்கள் பங்கேற்ற இப் போட்டியில் சேலம் ரயில்வே பாதுகாப்புப் படையைச் சோ்ந்த நாய், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. போட்டியில் வெற்றிபெற்ற மோப்ப நாய்களுக்கு கால்நடைப் பராமரிப்புத் துறை அதிகாரிகள் பரிசுகளை வழங்கினா்.