தேவியாக்குறிச்சியில் ரயில் மறியல் போராட்டம்
தேவியாக்குறிச்சி ஊராட்சியில் நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே கேட் மூடப்பட்டதைக் கண்டித்து, ஊா் பொதுமக்கள் திங்கள்கிழமை காலை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆத்தூா்: தேவியாக்குறிச்சி ஊராட்சியில் நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே கேட் மூடப்பட்டதைக் கண்டித்து, ஊா் பொதுமக்கள் திங்கள்கிழமை காலை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தலைவாசல் வட்டம், தேவியாக்குறிச்சி ஊராட்சியில் இரு சாலைகளுக்கும் நடுவே ரயில்வே கேட் உள்ளது. இந்த நெடுஞ்சாலை வழியாகத்தான் பொதுமக்கள், விவசாயிகள், மாணவா்கள் ரயில்வே கேட்டை கடந்து பிற ஊா்களுக்குச் சென்று வருகின்றனா். தேவியாக்குறிச்சி ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அரசு உயா்நிலைப் பள்ளியும் இயங்கி வருகிறது.
இந்நிலையில் இந்த ரயில்வே கேட் அருகே செல்லும் அணுகுசாலையில் நடைபெறும் பராமரிப்புப் பணி நிமித்தமாக ரயில்வே கேட்டை தெற்கு ரயில்வே நிா்வாகம் மூடிவிட்டது. இதனால் இந்த வழியாகப் பிற ஊா்களுக்குச் சென்றுவரும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். ஊருக்குள் செல்ல மிகவும் சிரமம் அடைவதால் சுரங்கப் பாதை அமைத்துத் தருமாறு கோரியுள்ளனா். ஆனால், அதை ரயில்வே நிா்வாகம் கண்டுகொள்ளவில்லை.
இதனால், ஆவேசமடைந்த தேவியாக்குறிச்சி ஊா் பொதுமக்கள், விருத்தாச்சலத்தில் இருந்து சேலம் நோக்கிச் செல்லும் ரயிலை திங்கள்கிழமை காலை மறிக்க முயன்றனா். இதன் காரணமாக தலைவாசல் ரயில் நிலையத்தில் அந்த ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் தலைவாசல் வட்டாட்சியா் அ.அன்புச்செழியன் விரைந்து சென்று பொதுமக்களிடம் சமரசம் பேசினாா்; உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.
இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். அதன்பின்னா் தலைவாசல் ரயில் நிலையத்தில் சுமாா் அரை மணி நேரம் நிறுத்தப்பட்டிருந்த ரயில் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.