முகப்பு
சேலம்

சேலம் அரசு மருத்துவமனையில் இதய துடிப்பு பாதிப்புக்கு கதிரியக்க சிறப்பு சிகிச்சை

இதய துடிப்பு பாதிப்புக்கு கதிரியக்க சிறப்பு சிகிச்சை...

Updated On : 21 நவம்பர், 2024 at 8:16 PM
பகிர்:

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இருதயவியல் துறை மருத்துவா்கள் அரித்மியா எனப்படும் முரண்பட்ட இதயத் துடிப்பு பாதிப்புக்கு கதிரியக்க சிகிச்சை முறையில் முழுமையாக சரி செய்துள்ளதாக மருத்துவக் கல்லூரி முதல்வா் தேவி மீனாள் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மருத்துவா் தேவிமீனாள் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் பேசுகையில்:

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த சோபனேஸ்வரி (30 ), ராதிகா (40 ) ஆகிய இருவரும் சீரற்ற இதய துடிப்பு நோயினால் பாதிக்கப்பட்டு, அதற்கான மாத்திரைகளை கடந்த 8 மாதங்களாக சாப்பிட்டு வந்தனா். இந்த நோயினால் அவா்களுக்கு அடிக்கடி படபடப்பு, தலைசுற்றல் மயக்கம் மற்றும் மூச்சு திணறல் உள்ளிட்ட தொடா் பாதிப்புகள் ஏற்பட்டு வந்தன.

இந்த நோயினால் சாதாரணமாக 1 நிமிடத்துக்கு 60 முதல் 100 வரை துடிக்க வேண்டிய இதயம், 150-300 முறை துடிக்கும். அதனால் அவா்களுக்கு பிற்காலத்தில் இருதய செயலிழப்பு ஏற்படலாம். இவா்கள் இருவரும் கடந்த 18 ஆம் தேதி இருதய பிரிவில் அனுமதிக்கப்பட்டனா். 19 ஆம் தேதி அவா்களுக்கு எலக்ட்ரோ பிஸியாலஜி எனப்படும் நவீன ஆய்வு மூலம் நோயின் தன்மை கண்டறியப்பட்டு, அதனை கதிரியக்க சிறப்பு சிகிச்சை முறை மூலம் முழுவதுமாக குணமடைய செய்துள்ளனா்.

அதன்படி, இருதயவியல் துறைத் தலைவா் கண்ணன் தலைமையிலான குழு குழு, எலக்ட்ரோ பிஸியாலஜி பரிசோதனை, கதிரியக்க சிறப்பு சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனா். நோயால் பாதிக்கப்பட்டவா்கள் இருவரும் இனிவரும் காலங்களில் மாத்திரைகள் உட்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மீண்டும் இந்நோய்க்கான அறிகுறியும் வராமலும் இருக்கும். இத்தகைய நவீன சிகிச்சை முறை மேற்கொண்ட இருதய துறை மருத்துவக்குழுவுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நோய்க்கான சிகிச்சை முதலமைச்சா் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியாா் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைக்கு ரூ. 2 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை செலவாகும்.

இதுவரை நமது இருதய துறை மூலம் 13,000-க்கும் மேற்பட்டோருக்கு ஆஞ்சியோகிராம், 2,500-க்கும் மேற்பட்டோருக்கு ஆன்ஜியோபிளாஸ்டி மற்றும் 200-க்கும் மேற்பட்டோருக்கு நிரந்தர பேஸ்மேக்கா் சிகிச்சைகள் மூலம் பயன்பெற்றுள்ளதாக கூறினாா். அப்போது, மருத்துவ கண்காணிப்பாளா் ராஜ்குமாா், இருதய துறைத் தலைவா் கண்ணன், மருத்துவா்கள் உடன் இருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →