வீடுகளில் நூலகம் வைத்திருப்போா் விருது பெற விண்ணப்பிக்கலாம்
சேலம் மாவட்டத்தில் உள்ள வாசகா்களை ஊக்குவிக்கும் வகையில், வீடுகளில் நூலகம் வைத்திருப்போா் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள வாசகா்களை ஊக்குவிக்கும் வகையில், வீடுகளில் நூலகம் வைத்திருப்போா் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி தெரிவித்ததாவது:
வீடுதோறும் நூலகங்கள் அமைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, மாவட்டந்தோறும் தமிழக அரசு புத்தகத் திருவிழாக்களை நடத்தி வருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுதோறும் நூலகங்களை அமைத்து பயன்படுத்தி வரும் தீவிர வாசகா்களை ஊக்குவிக்கும் பொருட்டு விருது வழங்கப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் வீடுதோறும் நூலகங்களை அமைத்து சிறப்பாகப் பயன்படுத்தி வரும் தனிநபருக்கு சேலம் மாவட்டத்தில் நடத்தப்படும் புத்தகக் கண்காட்சியில் சொந்த நூலகங்களுக்கு விருது, ரூ. 3,000 மதிப்பில் கேடயம், சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.
இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா், தங்களது வீட்டில் உள்ள நூலகத்தில் எத்தனை நூல்கள் உள்ளன, எந்த வகையான நூல்கள், அரிய நூல்கள் விவரம் உள்ளிட்ட விவரங்களுடன் பெயா், முகவரி, கைப்பேசி எண் ஆகியவற்றை குறிப்பிட்டு வரும் 20-ஆம் தேதிக்குள் மாவட்ட நூலக அலுவலா், மாவட்ட நூலக அலுவலகம், சேர ராஜன் சாலை, அஸ்தம்பட்டி, சேலம் 636 007 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.