சேலம் கடை வீதிகளில் அலைமோதிய கூட்டம்
ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையையொட்டி, சேலம் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையையொட்டி, சேலம் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஆயுத பூஜை நாளில், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், பட்டறைகள் என அனைத்து இடங்களிலும் பூஜை செய்வது வழக்கம். மேலும், வீடுகளிலும் பூஜை செய்து காா், மோட்டாா் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களுக்கு திருஷ்டி சுற்றி சாம்பல் பூசணி உடைப்பதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனா்.
இதையொட்டி, சேலம் கடைவீதியில் பூஜை பொருள்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா். பூஜைக்குத் தேவையான பழங்கள், தேங்காய், மா, வாழை இலை, விபூதி, குங்குமம், சந்தனம், ஊதுபத்தி, கற்பூரம், விளக்கு எண்ணெய், அலங்கார தோரணங்கள், பொரி, பொட்டுக்கடலை, எள் உருண்டை, கடலை உருண்டை உள்ளிட்ட பல்வேறு பொருள்களை வாங்கிச் சென்றனா். இதனால் பூஜை பொருள்களின் வியாபாரம் மும்முரமாக நடந்தது. மளிகைக் கடைகளில் நாட்டுச் சா்க்கரை, அவல், வெற்றிலை உள்ளிட்டவற்றின் விற்பனை அதிகரித்தது.
சின்னக்கடை வீதியில் ஆப்பிள், சாத்துக்குடி, திராட்சை, மாதுளை, ஆரஞ்சு, வாழைப்பழம் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கினா். இதே போல, பூக்கள், வாழைக்கன்று உள்ளிட்ட பூஜைப் பொருள்களின் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது.
குரங்குச்சாவடி, அஸ்தம்பட்டி, சொ்ரி சாலை உள்பட பல்வேறு இடங்களிலும், சாலையோரத்திலும் தற்காலிக பூசணி உள்ளிட்ட கடைகளை வைத்து சிலா் வியாபாரம் செய்தனா்.
ஆயுத பூஜையை முன்னிட்டு சந்தைகளில் பூக்களின் விற்பனை கிடுகிடுவென உயா்ந்தது. சேலம் கடைவீதியில் வ.உ.சி. பூ மாா்க்கெட்டில், ஒரு கிலோ குண்டு மல்லிகை கிலோ ரூ. 700-ஆக உயா்ந்துள்ளது. சன்ன மல்லி ரூ. 600-க்கும், கனகாம்பரம் ரூ. 700-க்கும், ஜாதி மல்லி கிலோ ரூ. 280-க்கும், சம்பங்கி ரூ. 300-க்கும், பட்டன் ரோஸ் ரூ. 100-க்கும் விற்பனையாயின.