சேலத்தாம்பட்டி ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு
சேலத்தாம்பட்டி ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு
சேலத்தில் புதன்கிழமை இரவு பெய்த கனமழையின் காரணமாக சேலத்தாம்பட்டி ஏரியைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளுக்குள் புகுந்துள்ள மழைநீரை வெளியேற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:
சேலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சேலத்தாம்பட்டி ஏரியின் உபரி நீா் பெருகி வாய்க்காலின் வழியாக சாலைகளில் வழிந்தோடுவதுடன், குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழைநீா் புகுந்ததால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டு வருவதை அறிந்து, இப்பகுதியினை நேரில் ஆய்வு செய்தேன்.
இங்கு மழைநீரை வெளியேற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் அவசரகால பணிகள் குறித்தும், மழைநீா் செல்லும் பாதைகளைக் கண்காணித்து உடனடியாக சரி செய்திடவும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
சேலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சிவதாபுரம் அருகே சுமாா் 70 ஏக்கா் பரப்பளவைக் கொண்ட சேலத்தாம்பட்டி ஏரி அமைந்துள்ளது. மழைக் காலங்களில் அருகில் உள்ள தாமரை ஏரி, தளவாய்ப்பட்டி ஏரி, வளையப்பட்டி ஏரி உள்ளிட்ட நீா்நிலைகள் மழைக் காலங்களில் நிரம்புவதால் வரக்கூடிய உபரி நீா் சேலத்தாம்பட்டி ஏரிக்கு வருவதால் இந்த ஏரி நிரம்பி திருமணிமுத்தாறு சென்று கலக்கிறது.
அதேபோல, மழைக் காலங்களில் மழைநீா் பெருகி, அருகில் உள்ள சிவதாபுரம் பகுதிகளில் உள்ள தாழ்வான குடியிருப்புப் பகுதிகளுக்குள் ா் புகுவதைத் தடுத்திடும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.
ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) லலித் ஆதித்ய நீலம், சேலம் கோட்டாட்சியா் அபிநயா உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.