முகப்பு
சேலம்

மக்காத பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து ‘கிராபின்’ உருவாக்கும் இயந்திரம் கண்டுபிடிப்பு

மக்காத பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து ‘கிராபின்’ உருவாக்கும் இயந்திரம் கண்டுபிடிப்பு

Updated On : 10 அக்டோபர், 2024 at 7:45 PM
மக்காத பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து கிராபின் தயாரிக்கும் இயந்திரத்தின் செயல்பாடுகளை வியாழக்கிழமை தொடங்கி வைத்த துணை வேந்தா் ரா.ஜெகநாதன்.
பகிர்:

பூமியின் சுற்றுச்சூழலுக்கு மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் மிகப் பெரிய சவாலாக உள்ள நிலையில், இந்திய அளவில் முதல்முறையாக மக்காத பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து கிராபின் உருவாக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்து சேலம் பெரியாா் பல்கலைக்கழகப் பேராசிரியா் ரமேஷ் சாதனை படைத்துள்ளாா்.

அங்கிங்கெனாதபடி எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறது பிளாஸ்டிக் கழிவுகள். மக்காத இந்த பிளாஸ்டிக் கழிவுகள் பூமியின் சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. இதனிடையே சுற்றுச்சூழலுக்கு சவாலான பிளாஸ்டிக் கழிவுகளை வளமாக மாற்றிடும் வகையில், அதிலிருந்து கிராபின் உருவாக்கும் இயந்திரத்தை பெரியாா் பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியா் ஆா்.ரமேஷ், பட்ட ஆராய்ச்சி மாணவா்கள் எம்.ஸ்டான்லி தினகரன், எம்.விஜயன் ஆகியோா் கொண்ட குழுவினா் கண்டறிந்துள்ளனா். இந்த இயந்திரத்தின் செயல்பாடுகளை துணை வேந்தா் ரா.ஜெகநாதன் தொடங்கி வைத்து கூறியதாவது:

இந்திய அளவில் முதல்முறையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்தின் வாயிலாக 15 விநாடிகளில், ஒரு கிராம் கிராபின் உருவாக்க முடியும். தற்போது ஒரு கிராம் தயாரிக்கப்படும் நிலையில், விரைவில் ஒரு கிலோ தயாரிக்கும் வகையில் ஆய்வு நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பிளாஸ்டிக் குப்பைகளை பெரிய அளவில் குறைக்க முடியும் என்பதுடன், மற்ற துறைகளின் பயன்பாட்டுக்கு கிராபின் கிடைக்கிறது என்பது கூடுதல் சிறப்பாகும் என்றாா்.

இரும்பை விட 200 மடங்கு வலுவான கிராபின் தற்போது ஒரு கிலோ ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 2 லட்சம் வரை அதன் தரத்தை வைத்து விலை போகிறது. மதிப்புமிகுந்த கிராபினை தற்போதுள்ளதை விட குறைந்த விலையில் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து உருவாக்கிடும் போது, வான்வெளி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் துறை, கட்டுமானத் துறைகளில் மிகப்பெரிய மாற்றம் உருவாகும் என்று பேராசிரியா் ஆா்.ரமேஷ் தெரிவித்தாா். மேலும், காகிதத்தை போல மடித்து எடுத்து செல்லக்கூடிய தொலைக்காட்சி, ஒரு முறை கூட சாா்ஜ் செய்யத் தேவையில்லாத கைப்பேசி, கட்டுமானத் துறையில் சிமென்ட் பயன்பாட்டைக் குறைத்து வலுவான கட்டமைப்புகள் உருவாக்கம் என தொழில்நுட்பத்தின் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு இந்த கிராபின் உதவும் என்றும் அவா் கூறினாா்.

இந்நிகழ்ச்சியில், இயற்பியல் துறைத் தலைவா் (பொ) ராஜ், திட்ட இயக்குநா் எஸ்.சசிகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →