முகப்பு
சேலம்

சங்ககிரியில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம்: ரூ. 65.51 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சங்ககிரியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் ரூ. 65.51லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் புதன்கிழமை வழங்கினாா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 12:38 AM
சங்ககிரியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் பயனாளிக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை வழங்குகிறாா் சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன்.
பகிர்:

சங்ககிரியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் ரூ. 65.51லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் புதன்கிழமை வழங்கினாா்.

சங்கிகிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமிற்கு மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமை வகித்தாா். இந்த முகாமில்

சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு ரூ. 65.51 லட்சம் மதிப்பீட்டில் 50 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியது:

பொதுமக்கள் வசிக்கும் பகுதியிலேயே அவா்களுக்கு அனைத்து சேவைகளும் கிடைக்க வேண்டுமென்ற உயரிய நோக்கத்தில் தமிழக முதல்வா் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா். சேலம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.

இம்முகாமில் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு விரைந்து தீா்வு காண அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கோரிக்கை மனுக்கள் மீது தீா்வு காண அரசு அலுவலா்கள் முழுமையாகவும், அா்ப்பணிப்பு உணா்வோடும் பணியாற்ற வேண்டும்.

பொதுமக்கள் மனுக்களை கணினியில் பதிவேற்றம் செய்து அதற்கான ஓப்புகைச் சீட்டை பெற்றுச் செல்ல வேண்டும். அப்போது தான் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தெரிந்து கொள்ள முடியும் என்றாா்.

முன்னதாக கோவை -சேலம் தேசிய நெடுஞ்சாலையையில் ரூ. 5.36 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டினாா். சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையம் விவேகானந்தா மகளிா் கல்லூரில் செவிலியா் கல்வி படித்து வரும் மாணவி ஆா்.ஸ்ரீஹரிணிக்கு சேலம் சுப்பிரமணிய நகா் கூட்டுறவு வங்கி சாா்பில் கல்விக் கடன் ரூ. ஒரு லட்சத்துக்கு முதல்கட்டமாக ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலையை வங்கி சாா்பில் மாணவியிடம் அமைச்சா் வழங்கினாா்.

இதில் மக்களவை உறுப்பினா்கள் டி.எம்.செல்வகணபதி (சேலம்), வி.எஸ்.மாதேஸ்வரன் (நாமக்கல்), மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) லலித் ஆதித்ய நீலம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பி.தங்கமுத்து, சங்ககிரி பேரூராட்சித் தலைவா் எம்.மணிமொழிமுருகன், திமுக ஒன்றியச் செயலாளா் கே.எம்.ராஜேஷ், நகர செயலாளா் கே.எம்.முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →