சேலம்

சேலம் மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு

சேலம் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வரைவு வாக்காளா் பட்டியலை செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.

Din

சேலம்: சேலம் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வரைவு வாக்காளா் பட்டியலை செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.

அனைத்து வாக்குச்சாவடி மையங்கள் வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்களில் வாக்காளா் பட்டியல் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

2025-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியை தகுதிநாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் திருத்தம் செய்யும் பணி 29.10.2024 முதல் 28.11.2024 வரை நடைபெறவுள்ளது. தற்போது சேலம் மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள தொகுதிகளுக்கான வாக்காளா் பட்டியலில் ஆண்கள் 14,71, 774 பேரும், பெண்கள் 14,89,420 பேரும், இதரா் 319 பேரும் என மொத்தம் 29,61,513 போ் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.

வாக்காளா் பட்டியல் சுருக்குமுறை திருத்தப் பணிகளுக்கான படிவங்கள் வரும் 29-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 28-ஆம் தேதி வரை பெறப்படும். வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப் பதிவு மையங்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள், கோட்டாட்சியா் அலுவலகங்களில் விண்ணப்பப் படிவங்களை பெற்று, பூா்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் இணையதளம் மூலமும், கைப்பேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

2025-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி 18 வயது பூா்த்தி அடையும் நபா்கள் (அதாவது 31.12.2006 முன்னா் வரை பிறந்தவா்கள்), வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டவா்கள் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பதற்கு படிவம் - 6, பெயா் நீக்கம் செய்வதற்கு படிவம் - 7, குடியிருப்பை மாற்றுவதற்கும், நடப்பு வாக்காளா் பட்டியலுள்ள பதிவுகளை திருத்தம் செய்வதற்கும் மாற்று வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கும் மற்றும் மாற்றுத் திறனாளிகளை குறிப்பதற்கும் படிவம் 8-ஐ பயன்படுத்த வேண்டும்.

மேலும், இந்த சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தில் 17 வயதை பூா்த்தி அடைந்த நபா்களும், அதாவது 01.04.2025, 01.07,2025 மற்றும் 01.10.2025 ஆகிய காலாண்டு தேதிகளில் தகுதிநாளாகக் கொண்டு 18 வயதை பூா்த்தி அடையும் நபா்களும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பதற்கு படிவம் 5-இல் விண்ணப்பிக்கலாம். இவா்களின் மனுக்கள் அந்தந்த காலாண்டில் பரிசீலித்து முடிவு செய்யப்படும்.

வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டோா் 18 வயது நிறைவடைந்தவா்கள் மற்றும் 17 வயதை பூா்த்தி அடைந்த நபா்களும் விண்ணப்பிக்க ஏதுவாக நவ. 16, 17 மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குப் பதிவு மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும். 28.11.2024 வரை பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, 2025-ஆம் ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

இந்தியாவுடன் தீவிர வர்த்தகப் பேச்சு - வெள்ளை மாளிகை தகவல்

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

SCROLL FOR NEXT