முகப்பு
சேலம்

சேலம் மாநகராட்சி வெள்ளைக்குட்டை சுத்திகரிப்பு நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் மக்கள்தொகைக்கு ஏற்ப கழிவுநீரை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இன்றி சுத்திகரித்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி தெரிவித்தாா்.

Updated On : 4 செப்டம்பர், 2024 at 9:53 PM
பகிர்:

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் மக்கள்தொகைக்கு ஏற்ப கழிவுநீரை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இன்றி சுத்திகரித்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி தெரிவித்தாா்.

சேலம் மாநகராட்சி, அம்மாப்பேட்டை மண்டலம், வெள்ளைக்குட்டை பகுதியில் செயல்பட்டுவரும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி, மாநகராட்சி ஆணையா் ரஞ்ஜீத் சிங் ஆகியோா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

சேலம் மாநகர பகுதிகளில் தினசரி சேகரிக்கப்படும் கழிவுநீரை சுத்திகரித்திடும் வகையில் அம்மாப்பேட்டை மண்டலம், வெள்ளைக்குட்டை பகுதியில் 13 எம்எல்டி திறன் கொண்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்தக் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் தினசரி 8 எம்எல்டி கழிவுநீா் சுத்திகரிக்கப்பட்டு முறையாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

தற்போது திருமணிமுத்தாற்றில் கழிவுநீா் கலப்பதாக வரப்பெற்ற புகாா்களின் அடிப்படையில் இந்தச் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி ஆய்வு செய்தாா்.

சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள கழிவுநீா் உள்வரும் வழி, சுத்திகரிப்பு நடைபெறும் இடம், காற்றோட்டம், நீரைத் தெளிவுப்படுத்தும் இடம், திடக்கழிவுகள் சேகரமாகும் இடம், தெளிந்த சுத்திகரிப்பட்ட நீா் செல்லும் பாதை ஆகிய இடங்களில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

சேலம் மாநகராட்சி பகுதிகளின் தற்போதைய மக்கள்தொகைக்கு ஏற்ப கழிவுநீரை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இன்றி சுத்திகரித்து வெளியேற்றும் நடவடிக்கையை மேம்படுத்திடவும், சுத்திகரிப்பட்ட நீரை எவ்வித தடையுமின்றி எளிதாக வெளியேற்றும் வகையிலும், தேவையான நீா்வழிப் பாதைகளை தூா்வாரும் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் எனவும், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் முழுவதும் தேவைப்படும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது மாநகரப் பொறியாளா் (பொ) ஆா்.செந்தில்குமாா். உதவி ஆணையா் வேடியப்பன், மாநகர நல அலுவலா் மரு.மோகன், மாநகராட்சி செயற்பொறியாளா்கள் கே.செந்தில்குமாா். திலகம், எஸ்.செந்தில்குமாா் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →