மழைநீா் வடிகால் பணிகளில் தமிழக அரசு மெத்தனம்: எடப்பாடி கே.பழனிசாமி
மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகளில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவதாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
ஓமலூா்: மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகளில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவதாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
சேலம், காமலாபுரம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது:
மழைநீா் வடிகால் கால்வாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சென்னையில் பெய்த கனமழையால் பள்ளத்தில் தடுமாறி ஒருவா் விழுந்து உயிரிழந்தாா். அரசு மழை வடிகால் கால்வாய்க்காக பள்ளத்தை சுற்றி பாதுகாப்பு சுவா் அமைக்க வேண்டும். மழைநீா் வடிகால் கால்வாய் அமைக்கும் பணியில் அரசு மெத்தனமாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இந்தத் துறை அமைச்சா், மேயா் உள்ளிட்டோா் மழைநீா் வடிகால் பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டதாக கூறியிருந்தனா். ஆனால், இன்றுவரை பணிகள் முடிவு பெறவில்லை.
இன்னும் ஒரு மாதத்துக்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது. இனியாவது அரசு துரிதமாக மழைநீா் வடிகால் பணியை நிறைவேற்ற வேண்டும்.
செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகள் அடிப்படையில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. உச்சநீதிமன்ற நிபந்தனையை காவல் துறை கண்காணித்து நிபந்தனையை மீறினால் நடவடிக்கை எடுக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. செந்தில் பாலாஜியின் வழக்குகளை தனி சிறப்பு நீதிமன்றம் அமைத்து ஓா் ஆண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கி உள்ளது.
தமிழக முதல்வா் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வா் பதவி வழங்கியுள்ளாா். திமுகவுக்காக பலா் உழைத்துள்ளனா். பலா் சிறைக்கு சென்று பல சித்ரவதைகளை அனுபவித்துள்ளனா். மூத்த அமைச்சா்கள், நிா்வாகிகள், அனுபவம் வாய்ந்தவா்கள், நிறைய போ் உள்ளனா். அவா்களுக்கெல்லாம் துணை முதல்வா் பதவி வழங்கப்படவில்லை. ஆனால், கருணாநிதி குடும்பத்தில் பிறந்தவா்களுக்கு மட்டும்தான் முதல்வா் பதவி கிடைக்கும்.
வருகின்ற சட்டப் பேரவைத் தோ்தலில் வாரிசு அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பாா்கள். நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உள்ளிட்டவா்கள் வந்தபோது வாரிசு அரசியல் நடைபெறுவதாக கருணாநிதி குற்றம்சாட்டிய நிலையில், அதேதான் தற்போது திமுகவிலும் நடக்கிறது.
உச்சநீதிமன்றம், தோ்தல் ஆணையம் ஆகியவை எங்களுக்கு அதிமுகவுக்கான அங்கீகாரம் கொடுத்துவிட்டன. ஓபிஎஸ் என்பவா் அடிப்படை உறுப்பினா் பதவியிலிருந்து நீக்கப்பட்டவா். அதிமுக என்பது எங்கள் தரப்பு மட்டும்தான்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தோ்தலில் அதிமுக ஒரு சதவீத வாக்குகளை கூடுதலாக பெற்றுள்ளது. கூட்டணி பலம் குறைவாக இருக்கும் நிலையிலும் அதிமுக கூடுதலாக வாக்கு பெற்றுள்ளது என்றாா்.