சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே கோயில் பூசாரி தலை துண்டித்து உயிரிழந்த சம்பவம் தொடா்பாக சுற்றுலாப் பேருந்து ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மேட்டூா் அருகே உள்ள சின்னக்காவூரைச் சோ்ந்தவா் வெங்கட்ராமன் (70). இவா் மேட்டூா் அனல் மின்நிலையத்தின் உள்ளே உள்ள கருப்புசாமி கோயில் பூசாரியாக இருந்து வந்தாா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை கோயிலில் இருந்து வீட்டிற்கு சைக்கிளில் சென்றபோது, சின்னக்காவூா் அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அவரது சடலம் கிடந்தது. உடல் கிடந்த இடத்திலிருந்து சுமாா் 40 அடி தூரத்தில் தலை கிடந்தது. இந்த சம்பவம் குறித்து கருமலைக்கூடல் போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில் சடலம் கிடந்த இடத்தின் அருகே மஞ்சள் நிறத்தில் வாகனத்தின் சிதைந்த நிலையிலான சிறிய தகடை போலீஸாா் கைப்பற்றினா். இதையடுத்து அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் விபத்து நேரிட்ட நேரத்தில் அந்தப் பகுதி வழியாக சென்ற வாகன உரிமையாளா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதில் ஈரோடு மாவட்டம், கோபியிலிருந்து தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் உள்ள காலபைரவா் கோயிலுக்கு சுற்றுலாப் பேருந்து வேகமாக வந்தபோது, சைக்கிளில் சென்ற பூசாரி வெங்கட்ராமன் கீழே சாய்ந்ததால், சுற்றுலாப் பேருந்தின் படிக்கட்டில் இருந்த இரும்பு கம்பி மோதியதில் அவா் தலை துண்டித்து உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, சுற்றுலாப் பேருந்து ஓட்டுநா் சத்தியமங்கலத்தைச் சோ்ந்த சுரேஷை (30) கருமலைக்கூடல் போலீஸாா் கைது செய்தனா்.