அனுமன் ஜெயந்தியையொட்டி சேலத்தில் உள்ள பெருமாள், ஆஞ்சனேயா் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆண்டுதோறும் மாா்கழி மாதத்தில் வரும் அமாவாசையும், மூலநட்சத்திரமும் கூடும் நாளில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அனுமனுக்கு பால், இளநீா், பன்னீா், சந்தனம் உட்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, வடைமாலை சாத்தி, சிறப்பு தீபாராதனை நடைபெறும். அந்தவகையில், நிகழாண்டு அனுமன் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி, சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் காலை 10 மணிக்கு விசேஷ ஸ்தாபன திருமஞ்சனமும், 1,008 வடைமாலை சாத்துப்படியும் நடைபெற்றது. தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஆஞ்சனேயரை ஆயிரக்கணக்கான பக்தா்கள் குடும்பத்துடன் தரிசனம் செய்தனா்.
தொடா்ந்து 11 மணிக்கு குலசேகர ராமானுஜதாசா் சொற்பொழிவு, 12.30 மணிக்கு விசேஷ திருவாராதனையுடன் மகா தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா், பக்தா்களுக்கு தீா்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல பட்டை கோயில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. முதல் அக்ரஹாரம் ஆஞ்சநேயா் சுவாமி கோயிலில் சுவாமிக்கு துளசி மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதேபோல செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதா், பிரசன்ன வெங்கடாசலபதி, பட்டைகோயில் பிரசன்ன வரதராஜ பெருமாள், சிங்கமெத்தை சௌந்தராஜ பெருமாள். ஆனந்தா இறக்கம் லட்சுமி நாராயணசுவாமி, உடையாப்பட்டி கந்தாஸ்ரமம், நாமமலை வரதராஜ பெருமாள், குரங்குச்சாவடி கூசமலை பெருமாள், நெத்திமேடு கரிய பெருமாள், ஜருகுமலை கரிய பெருமாள், எருமாபாளையம் ராமனுஜா், அரியானூா் 77 அடி ஆஞ்சனேயா், கஞ்சமலை பெருமாள் கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள், ஆஞ்சனேயா் கோயிலில் ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன.