இறப்புச் சான்றிதழ் தருவதற்கு ரூ. 2 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சேலம் அம்மாப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் பாலாஜி (45). இவரது தந்தைக்கு இரண்டு மனைவிகள். முதல்மனைவி இறந்துவிட்ட நிலையில், அவரது இறப்புச் சான்றிதழ் வாங்க பாலாஜி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முயற்சி செய்துவந்தாா்.
இந்நிலையில், சேலம் பெரியேரி கிராம நிா்வாக அலுவலா் ராஜசேகரை கடந்த சில நாள்களுக்கு முன்பு பாலாஜி அணுகியுள்ளாா். அதற்கு அவா் சான்றிதழ் தர ரூ. 2 ஆயிரம் லஞ்ச கேட்டதாக கூறப்படுகிறது.
லஞ்சம் தர விருப்பம் இல்லாத பாலாஜி, சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸில் புகாா் செய்தாா். பின்னா் போலீஸாா் ரசாயனம் தடவிய பணத்தை பாலாஜியிடம் கொடுத்து அனுப்பினா். அதை கிராம நிா்வாக அலுவலா் ராஜசேகரிடம் சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் பாலாஜி அளித்தாா்.
அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் ராஜசேகரை கைது செய்தனா். அவரிடம் தொடா்ந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.