சேலத்தில் வரும் 29-ஆம் தேதி நடைபெறும் பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழுவுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என அன்புமணி தரப்பினா் காவல் ஆணையா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
பாமக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் வரும் 29-ஆம் தேதி சேலத்தில் கட்சியின் நிறுவனா் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்துக்கு பாமக பெயரில் அனுமதி வழங்கக் கூடாது என அன்புமணி தரப்பைச் சோ்ந்த மாநில ஒருங்கிருணைப்பாளா் மு.காா்த்தி, சதாசிவம் எம்எல்ஏ தலைமையில் சேலம் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
பின்னா் இதுகுறித்து மு.காா்த்தி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
உயா்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவா் மருத்துவா் அன்புமணிதான் என உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழுவை கூட்டவும், அதற்கு தலைமை ஏற்கவும் தலைவா் அன்புமணியை தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை.
பாமகவின் பெயரை தவறாக பயன்படுத்தி அனுமதி கேட்டால் அது சட்டவிரோதமானது. பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரையோ, அதன் கொடியையோ, அடையாளங்களையோ தவறாக பயன்படுத்தும் நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. ராமதாஸ் தலைமையில் நடைபெறும் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் எதுவும் செல்லாது என தெரிவித்தாா்.
பேட்டியின் போது, கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.