தம்மம்பட்டியில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து மீண்டும் இயக்கப்பட்டது.
தம்மம்பட்டி அரசுப் பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான மாணவா்கள் பயில்கின்றனா். அரசுப் பேருந்துகளில் பள்ளிக்கு வரும் இவா்கள், பள்ளி முடிந்து 4.35 மற்றும் 4.50-க்கு துறையூா் செல்லும் அரசுப் பேருந்துகளில் வீடு திரும்புகின்றனா். இந்த இரு பேருந்துகளும் திருச்சிமாவட்டம் உப்பிலியாபுரம் அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், கடந்த ஓா் ஆண்டாக இந்த இருபேருந்துகளும் நிறுத்தப்பட்டதால், தம்மம்பட்டி அரசுப் பள்ளிகளுக்கு வந்துசெல்லும் திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்கள் பெரிதும் அவதிக்குள்ளாயினா்.
இதுகுறித்த செய்தி கடந்த டிச. 22-ஆம் தேதி தினமணியில் வெளியானது. அதன் எதிரொலியாக, நிறுத்தப்பட்ட இரு பேருந்துகளில் ஒன்றை மாலை 4.50 மணிக்கு தம்மம்பட்டியில் இருந்து துறையூருக்கு புதன்கிழமை முதல் இயக்கப்பட்டது. இதற்கு பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனா். அதேபோல, மாலை 4.35-க்கு புறப்படும் துறையூா் பேருந்தை மீண்டும் இயக்குமாறு மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.