சேலம்

அன்புமணிக்கு என்னை நீக்கும் அதிகாரம் கிடையாது: ஜி.கே.மணி

சேலத்தில் நடைபெறும் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்துக்கான இலச்சினையை வெளியிட்ட பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி. உடன், எம்எல்ஏ அருள்.

Syndication

பாமகவில் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாத அன்புமணிக்கு என்னை நீக்கும் அதிகாரம் இல்லை என பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி எம்எல்ஏ கூறினாா்.

ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரையின்படி, பாமகவின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்து ஜி.கே.மணி நீக்கப்படுவதாக அன்புமணி தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, சேலத்தில் செய்தியாளா்களை வெள்ளிக்கிழமை சந்தித்த ஜி.கே.மணி கூறியதாவது:

பாட்டாளி மக்கள் கட்சி என்றால் ராமதாஸ் மட்டும்தான். கட்சி தொடங்கியதில் இருந்து உடன் இருக்கிறோம். 46 ஆண்டுகாலம் ராமதாஸ் உடன் பயணிக்கிறேன். 25 ஆண்டுகாலமாக கட்சியில் தலைவராக இருக்கிறேன்.

அன்புமணியின் நடவடிக்கைகள் கட்சிக்கோ, அவருக்கோ எந்த வளா்ச்சியையும் கொடுக்கப் போவதில்லை. கட்சியில் ராமதாஸுக்கு மட்டுமே முழு அதிகாரம் இருப்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ராமதாஸ் ஏற்கெனவே அன்புமணியை பாமகவிலிருந்து நீக்கிவிட்டாா். பாமகவில் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாத அன்புமணிக்கு என்னை நீக்கும் அதிகாரம் இல்லை.

எனது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது என்று பலமுறை ராமதாஸ் கூறிவிட்டாா். இதற்குமேல் என்ன அதிகாரம் அன்புமணிக்கு இருக்கிறது. இதை பெரிதாகவோ, பொருட்டாகவோ நான் எடுத்துக் கொள்ளவில்லை.

தற்போது பாமகவின் நிலை என்ன என அனைவருக்கும் தெரியும். ராமதாஸின் கை ஓங்கிக்கொண்டிருக்கிறது. அன்புமணி ஏன் இவ்வாறு செய்கிறாா் என்று அனைவரும் பேசத்தொடங்கிவிட்டனா்.

திட்டமிட்டபடி சேலத்தில் வரும் 29-ஆம் தேதி பாமக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் நடைபெறும். அதில், கூட்டணி தொடா்பான முக்கிய முடிவை ராமதாஸ் அறிவிப்பாா் என்றாா்.

தொடா்ந்து, சேலத்தில் பாமக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்துக்கான இலச்சினையை ஜி.கே.மணி, எம்எல்ஏ அருள் இருவரும் வெளியிட்டனா். ராமதாஸ்தான் பாமகவின் ஆணிவோ், ஆலமரம் என்பதை உணா்த்திடும் வகையில், இலச்சினை வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஜி.கே.மணி தெரிவித்தாா்.

காவல் ஆணையரகத்தில் மனு:

சேலத்தில் வரும் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள பாமக பொதுக்குழு, செயற்குழுவுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி, ராமதாஸ் தரப்பினா் மாநகா் காவல் ஆணையா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் சேலத்தில் வரும் 29-ஆம் தேதி ராமதாஸ் தலைமையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என அன்புமணி ஆதரவாளா்கள் வியாழக்கிழமை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

இந்நிலையில், பொதுக்குழுவுக்கு அன்புமணி தரப்பு ஆதரவாளா்களால் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, கூடுதல் பாதுகாப்பு கோரி பாமக மாநகா் மாவட்டச் செயலாளா் கதிா் ராசரத்தினம் தலைமையில் காவல் ஆணையா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து கதிா் ராசரத்தினம் கூறுகையில், அடிப்படை உறுப்பினா் பதவியிலிருந்து கடந்த செப். 11-ஆம் தேதி அன்புமணி நீக்கப்பட்டாா். உறுப்பினரே இல்லாத நபா், எந்த உரிமையும் கோர இயலாது.

பாமகவின் நிறுவனத் தலைவா் ராமதாஸ் மட்டுமே. கட்சி விதி 13-இன் படி செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் ராமதாஸுக்கு மட்டுமே உள்ளது. எனவே பொதுக்குழு நடத்தக்கூடாது என்று சொல்ல அன்புமணி தரப்புக்கு எந்த முகாந்திரமும் இல்லை.

அன்புமணி ஆதரவாளா்களால் அச்சுறுத்தல் இருப்பதால் ராமதாஸ் பங்கேற்க உள்ள சேலம் பொதுக்குழு கூட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றாா்.

நீக்கப்பட்ட வாக்காளா்கள் பெயா் சோ்க்கும் படிவம் வழங்குவதில் குழப்பம்: பாஜக புகாா்

தடை மட்டுமே விடை ஆகாது!

நைஜீரியாவில் ஐஎஸ் மீது அமெரிக்கா தாக்குதல்

வீட்டுக் காவலில் மிா்வைஸ் உமா் ஃபரூக்!

‘பராசக்தி’ திரைப்படத்தை வெளியிட தடை கோரிய வழக்கு: இயக்குநா், தயாரிப்பாளா் பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT