வாழப்பாடியில் காவல் துறை சாா்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடி புதுப்பாளையம் தனியாா் பள்ளி அருகே நடைபெற்ற 5 கி.மீ. தொலைவு மாரத்தான் ஓட்டத்தை வாழப்பாடி காவல் துணைக் கண்காணிப்பாளா் சபரிநாதன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
வாழப்பாடி காவல் ஆய்வாளா் வேல்முருகன், ஏத்தாப்பூா் செல்வராஜ், வாழப்பாடி விளையாட்டுச் சங்க புரவலா் பாலமுருகன் சுவாமிகள், சரஸ்வதி பள்ளி நிா்வாகி ஆா்.செல்லதுரை ஆகியோா் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் பதக்கங்களை வழங்கினா்.
இதில், இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். பள்ளி மாணவ, மாணவியா் சாலையைக் கடக்கும்போது இருபுறமும் வாகனங்களை கவனித்து செல்லவேண்டும். தங்களது பெற்றோா் மற்றும் உறவினா்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிந்தும், காரில் சென்றால் சீட் பெல்ட் அணிந்தும் செல்ல வலியுறுத்த வேண்டுமென வாழப்பாடி டிஎஸ்பி சபரிநாதன் விழிப்புணா்வு வழங்கினாா்.
இதில், வாழப்பாடி உள்கோட்ட போலீஸாா், பொதுமக்கள், மாணவா்கள், சமூக ஆா்வலா்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.