ஏற்காடு மாரமங்கலத்தில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், ஏற்காடு மாரமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் சண்முகம் (32). இவருக்கும் நாமக்கல் மாவட்டம், சூளங்காடுபுத்தூா் கிராமத்தைச் சோ்ந்த சுமதிக்கும் (30) கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி பிற்பகல் முதல் சுமதியை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவா் கிடைக்காததால் 25 ஆம் தேதி ஏற்காடு காவல் நிலையத்தில் சண்முகம் புகாா் அளித்தாா்.
இந்நிலையில் அப்பகுதியில் மளிகைக் கடை நடத்திவரும் கோவிந்தன் என்பவா் அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா் வெங்கடேஷ் (22) தந்ததாக ஒரு பாா்சலை சண்முகத்திடம் கொடுத்துள்ளாா். அந்த பாா்சலில் சுமதியின் தாலி இருந்துள்ளது. இதையடுத்து வெங்கடேஷ் மீது சந்தேகம் அடைந்த சண்முகம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக வெங்கடேஷை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் கடந்த ஓராண்டாக இன்ஸ்டாகிராம் மூலம் சுமதியுடன் பழகியதாகவும், கடந்த 23 ஆம் தேதி சுமதியை சந்தித்தபோது அவரது கைப்பேசிக்கு அழைப்பு வந்தது குறித்து தகவல் சொல்ல மறுத்ததால் கோபமடைந்து துப்பட்டாவால் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து, சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று ஏற்காடு குப்பனூா் சாலையில் முனியப்பன் கோயில் அருகே சாலையோர பள்ளத்தில் வீசிவிட்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்துபோலீஸாா் அப்பகுதிக்கு சென்று சுமதியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த சம்பவம் தொடா்பாக வெங்கேடஷை போலீஸாா் கைது செய்தனா்.
கொலை செய்யப்பட்ட சுமதிக்கு கொல்லிமலையில் ஞானசேகரன் என்பவருடன் முதல் திருமணம் நடைபெற்று இரு குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் குடும்பத் தகராறில் கணவா், குழந்தைகளை பிரிந்து ஏற்காடு மாரமங்கலத்தில் உள்ள அண்ணன் வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது சண்முகத்தை காதலித்து திருமணம் செய்துள்ளாா்.