வாழப்பாடி அரசுப் பள்ளிகளில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
வாழப்பாடி பகுதி அரசுப் பள்ளிகளில் சமத்துவ பொங்கல் விழா, திங்கள்கிழமை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
வாழப்பாடி: வாழப்பாடி பகுதி அரசுப் பள்ளிகளில் சமத்துவ பொங்கல் விழா, திங்கள்கிழமை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவிற்கு, பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவா் கு.கலைஞா்புகழ் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் கோ.ரவீந்திரன் வரவேற்றாா். பெற்றோா்- ஆசிரியா் கழக நிா்வாகிகள் எம்.கோபிநாத், ஆா்.குணாளன், சுப்பிரமணி ஆகியோா் முன்னிலையில், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் கீா்த்தனா, துணைத் தலைவா் சங்கீதா, முன்னாள் தலைவா் அலமேலு மற்றும் உறுப்பினா்கள் ஒன்றிணைந்து, சமத்துவ பொங்கலிட்டு, மாணவா்களுக்கு சமபந்தி விருந்து பரிமாறினா். ஆசிரியா்கள், பெற்றோா்- ஆசிரியா் கழக நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா். நிறைவாக, ஆசிரியா் முனிரத்தினம் நன்றி கூறினாா்.
வாழப்பாடி அண்ணா நகா் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியை ஷபிராபானு தலைமையிலும், பேளூா் உருது தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியா் செல்வம் தலைமையிலும், கண்கட்டி ஆலா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியை புஷ்பா எம்கோ தலைமையிலும் பள்ளி மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சியோடு, சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.