முதல்வா் மருந்தகத்துக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
முதல்வா் மருந்தகத்துக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜன. 29 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சேலம்: முதல்வா் மருந்தகத்துக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜன. 29 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் (பொ) க.ராஜ்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பொதுப் பெயா் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற வகை மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1,000 முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வா் கடந்த சுதந்திர தின விழாவில் அறிவித்தாா். முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பாா்ம், டி.பாா்ம் சான்றிதழ் பெற்றவா்கள் அல்லது அவா்கள் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வா் மருந்தகம் அமைக்க இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள தொழில் முனைவோா் டிச.10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்த நிலையில், விண்ணப்பிப்பதற்கான தேதி வரும் 29 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் செய்வதற்கு அரசு ரூ. 1.50 லட்சம், மருந்துகள் கொள்முதல் செய்ய ரூ. 1.50 லட்சம் அளவுக்கு நிதி உதவி அளிக்கப்படும். இதில் ஏதேனும் சந்தேகங்களுக்கு 0427-2415158 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.