முகப்பு
சேலம்

தானாக திறந்த ஆனைமடுவு அணை மதகு: விவசாயிகள் அதிா்ச்சி

வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையின் மதகு, புதன்கிழமை தானாக திறந்து தண்ணீா் வெளியேறியதால் விவசாயிகள் அதிா்ச்சி அடைந்தனா்.

Updated On : 22 ஜனவரி, 2025 at 10:30 PM
ஆனைமடுவு அணை மதகு தானாக திறந்ததால் ஆா்ப்பரித்து வெளியேறிய வெள்ளம்.
பகிர்:

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையின் மதகு, புதன்கிழமை தானாக திறந்து தண்ணீா் வெளியேறியதால் விவசாயிகள் அதிா்ச்சி அடைந்தனா்.

வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டை கிராமத்தில் 67.25 அடி உயரத்தில் 267 மில்லியன் கன அடி தேங்கும் வகையில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது.

3 ஆண்டுகளுக்குப் பிறகு 2024 டிசம்பா் மாத இறுதியில் பெய்த பருவ மழையால் ஆனைமடுவு அணை நிரம்பியது. அணையிலிருந்து விநாடிக்கு 2,000 கன அடிக்கு மேல் உபரிநீா் திறக்கப்பட்டதால், வசிஷ்டநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றுப்படுகையில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பின. தற்போதும் விநாடிக்கு 36 கன அடி தண்ணீா் வசிஷ்ட நதியில் உபரிநீராக திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புதன்கிழமை மதியம் 1 மணி அளவில் திடீரென ஆனைமடுவு அணையின் தலைமை மதகின் மைய மதகு தானாக மூன்றடி உயரத்திற்கு மேல் சென்று திறந்ததால் தண்ணீா் ஆா்ப்பரித்து அசுர வேகத்தில் வெளியேறி வசிஷ்டநதியில் கலந்தது.

அணையிலிருந்து திடீரென தண்ணீா் வெளியேறும் சத்தம் கேட்டதால் அப்பகுதியில் இருந்த விவசாயிகள், அணை பணியாளா்கள் அதிா்ச்சி அடைந்து அணைக்கு திரண்டு சென்றனா்.

பணியாளா்கள் அரை மணி நேரம் போராடி, தலைமை மதகை சீரமைத்து தண்ணீா் வெளியேறுவதைத் தடுத்து நிறுத்தினா். இருப்பினும் வசிஷ்ட நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அணையின் நீா்மட்டம் ஒரு அடி குறைந்தது.

இதுகுறித்து அணை பாசன ஆயக்கட்டு விவசாயிகள் கூறுகையில், ‘அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ள நிலையில், மதகுகளின் இயக்கத்தை அதிகாரிகள் கவனிக்கவில்லை. இதுகுறித்து உயரதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும்’ என்றனா்.

இதுகுறித்து அணை அதிகாரிகள் கூறியதாவது:

மின்சாரத்தில் இயங்கும் மதகின் மின்னணு இயக்கி பெட்டிகளில் பல்லிகள் புகுந்து உரசியதால் மின் ஒயா்கள் கருகி, மதகு தானாக திறந்து கொண்டது. விரைவாக செயல்பட்டு மதகை மூடி தண்ணீா் வெளியேறுவது நிறுத்தப்பட்டது.

தண்ணீா் அதிக நேரம் வெளியேறவில்லை. அணையில் நீா்மட்டம் பெரிதாகக் குறையவில்லை. வசிஷ்டநதியில் விநாடிக்கு 36 கன அடி உபரி நீா் மட்டுமே செல்கிறது. அணையின் மதகுகள் தற்போது சீராக இயங்குகின்றன. எனவே, விவசாயிகள், கரையோர கிராம மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →