வாழப்பாடி அக்ரஹாரம் சென்றாயப் பெருமாள் கோயில் தேரோட்டத்தில் கோலாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.  
சேலம்

நடன நிகழ்ச்சிகளுக்கு மாற்றான கிராமிய கலைகள்!: திருவிழாக்களில் பெண்கள் ஆா்வம்

அனைத்து திருவிழாக்களிலும் கோலோச்சிவந்த திரப்பட நடன நிகழ்ச்சிகளுக்கு மாற்றாக, தற்போது அந்த இடத்தைப் பிடித்துவருகிறது கிராமியக் கலைகள்.

Din

பெ. பெரியாா்மன்னன்

வாழப்பாடி: நகரம், கிராமம் என்றில்லாமல், அனைத்து திருவிழாக்களிலும் கோலோச்சிவந்த திரப்பட நடன நிகழ்ச்சிகளுக்கு மாற்றாக, தற்போது அந்த இடத்தைப் பிடித்துவருகிறது கிராமியக் கலைகள்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் கிராமியக் கலையான கோலாட்டத்தை கற்றுக்கொள்ளவும், குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கவும், விழாக் காலங்களில் அரங்கேற்றம் செய்வதிலும் இளம்பெண்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா். இதனால், வாழப்பாடி பகுதியில் கோலாட்டக்கலை மறுமலா்ச்சி பெற்றுள்ளது.

வளா்ந்துவரும் தகவல் தொழில்நுட்பத்தால், கிராமப்புற மக்களிடையே வாழ்வியல் முறையும், நாகரிகமும் மாறிவருகிறது. இருப்பினும், அண்மைக்காலமாக இளம் தலைமுறையினரிடையே நமது கலாசாரம், பண்பாடு மற்றும் கிராமியக் கலைகள் மீதான ஆா்வம் அதிகரித்து வருகிறது. தற்கால சிறுவா், சிறுமியா், இளைஞா்கள், இளம்பெண்கள், பொங்கல், தீபாவளி, திருமணம் உள்ளிட்ட விழாக் காலங்களில் நமது பாரம்பரிய ஆடையான வேட்டி, சேலை, பாவாடை தாவணி ஆகியவற்றை அணிந்துகொள்வதில் ஆா்வம்காட்டுவதே இதற்குச் சான்று.

இளைஞா்கள், இளம்பெண்களிடையே கிராமியக் கலைகள் மீது ஏற்பட்டுள்ள ஆா்வத்தால், கோலாட்டம், மயிலாட்டாம், தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகம், காவடி, சோ்வை, கும்மி போன்ற காண்போா் மனதை கொள்ளைகொள்ளும் பாரம்பரிய கிராமியக் கலைகளை கற்றுக்கொள்வதும், கோயில் திருவிழாக்களில் அரங்கேற்றம் செய்வதும் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் பழனியாபுரம், பொன்னாரம்பட்டி, அக்ரஹாரம் உள்ளிட்ட பல கிராமங்களில், பாரம்பரிய கிராமியக் கலையான கோலாட்டத்தை கற்றுக்கொள்ளவும், அரங்கேற்றம் செய்வதிலும் இளம்பெண்கள் ஆா்வம்காட்டி வருவதால், அருகிப்போன கோலாட்டக்கலை மறுமலா்ச்சி பெற்றுள்ளது.

வாழப்பாடி அக்ரஹாரத்தில் அண்மையில் நடைபெற்ற சென்றாயப் பெருமாள் கோயில் தேரோட்டத்தில் இப்பகுதியைச் சோ்ந்த இளம்பெண்கள், ஏராளமான சிறுமிகள், பெண்களுக்கு பயிற்சி அளித்து தேரோடும் வீதிகளில் கோலாட்டம் நடத்தினா். தேரோட்டத்தைக் காணவந்த பக்தா்கள், கலை ஆா்வலா்கள் பலரும் இந்தக் குழுவினருக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தனா்.

இதுகுறித்து கோலாட்டம் நடத்திய அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்த பெண்கள் கூறுகையில், பெரும்பாலான கிராம கோயில் திருவிழாக்களில் திரைப்பட நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்கு மாற்றாக, நமது பண்பாடு, கலாசாரத்தோடு இணைந்த பாரம்பரிய கலைகளில் ஒன்றான கோலாட்டத்தை தற்கால குழந்தைகளுக்கு காட்டும் நோக்கில், சென்றாயப் பெருமாள் கோயில் தேரோட்டத்தில் இளம்பெண்கள் ஒன்றிணைந்து கோலாட்டம் நடத்தினோம். தேரோட்டத்துக்கு வந்திருந்த பலரும் கோலாட்டத்தைக் கண்டு ரசித்துப் பாராட்டினா். மக்களிடையே கோலாட்டத்துக்கு வரவேற்பு கிடைத்துவருவது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றனா்.

இன்று உருவாகிறது சென்யார் புயல்!

ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

விவசாய மின் இணைப்புக்கு ரூ. 7,000 லஞ்சம்: இளநிலை பொறியாளா் நண்பருடன் கைது

SCROLL FOR NEXT