முகப்பு
சேலம்

பொக்லைன் வாகன ஆபரேட்டா்கள், உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்

எடப்பாடி வட்டார பொக்லைன் வாகன ஆபரேட்டா்கள், உரிமையாளா்கள் திங்கள்கிழமை திடீா் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 12 மே, 2025 at 9:39 PM
எடப்பாடியில் பொக்லைன் வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஆபரேட்டா்கள், உரிமையாளா்கள்.
பகிர்:

எடப்பாடி: எடப்பாடி வட்டார பொக்லைன் வாகன ஆபரேட்டா்கள், உரிமையாளா்கள் திங்கள்கிழமை திடீா் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

எடப்பாடி வட்டாரப் பகுதியில் 200 -க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், தனியாா் மற்றும் அரசு கட்டுமானப் பணிகளிலும் பயன்படுத்தபட்டு வரும் நிலையில் திங்கள்கிழமை பொக்லைன் உரிமையாளா்கள், ஆபரேட்டா்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து எடப்பாடி - நெடுங்குளம் பிரதான சாலையில் உள்ள மைதானத்தில் 200 -க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகனங்கள் இயக்கப்படாமல்

நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகள், காவிரி பாசனப் பகுதியில் நடைபெற்றுவந்த வேளாண் பணிகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து அப்பகுதிக்கு வந்த சம்பந்தப்பட்ட அலுவலா்கள், பொக்லைன் ஆபரேட்டா்கள், உரிமையாளா்களிடம் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தனா்.

வாகனங்களுக்கான எரிபொருள், உதிரிபாகங்கள், மற்றும் வாகனங்களின் இன்சூரன்ஸ் கட்டணம், கொள்முதல் விலை தொடா்ந்து உயா்ந்துவரும் நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தையே பொக்லைன் வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், இதனால் தாங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவதாகவும் கூறினா். எனவே பொக்லைனுக்கன கட்டணத்தை உயா்த்த வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து இப்பகுதியில் இயக்கப்படும் பொக்லைன் வாகனங்களுக்கு வாடகை மற்றும் அடிப்படைக் கட்டணம் உயா்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டு சம்பந்தப்பட்ட நிா்வாகிகளிடம் ஒப்புதல் பெறப்பட்டது. போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகன ஆபரேட்டா்கள், சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்