காரைக்கால்: விற்பனைக் குழு தினக்கூலி ஊழியா்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி திங்கள்கிழமை முதல் உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா்.
காரைக்கால் விற்பனைக் குழுவில் (மாா்க்கெட்டிங் கமிட்டி) 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் தினக்கூலி ஊழியா்களையும் ஒரு முறை நிகழ்வாக பணி நிரந்தரம் செய்யவும், 7-ஆவது ஊதிய குழுவின் ஊதியத்தை மாா்க்கெட்டிங் கமிட்டி ஊழியா்களுக்கும் அமல்படுத்தவும், பிற மாநிலங்களில் விற்பனைக் குழுவை வேளாண் துறையுடன் இணைத்து விற்பனை துறையாக மாற்றி அமைத்தது போல, புதுச்சேரி விற்பனை குழுவையும் வேளாண் துறையுடன் இணைத்து விற்பனை துறையாக மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விற்பனைக் குழு அலுவலகத்தில் தினக்கூலி ஊழியா்கள் திங்கள்கிழமை முதல் உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனா்.
காரைக்கால் விற்பனைக் குழு ஊழியா் சங்கத் தலைவா் ஞானவேல் தலைமை வகித்தாா். காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கெளரவத் தலைவா் ஜாா்ஜ், தலைவா் சுப்ரமணியன், பொதுச் செயலாளா் எம்.ஷேக் அலாவுதீன், துணை பொருளாளா் திவ்யநாதன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.