சேலம்: அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியின் 71-ஆவது பிறந்தநாளையொட்டி, சேலத்தில் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் கோயில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் நடைபெற்றது.
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியின் 71 ஆவது பிறந்தநாளையொட்டி சேலம் மாநகா் மாவட்ட அம்மாப்பேட்டை பகுதி சாா்பில், ராஜகணபதி கோயிலில் அதிமுகவினா் சிறப்பு வழிபாடு நடத்தினா். இதனைத்தொடா்ந்து பக்தா்களுக்கும், பொது மக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அதிமுக பகுதிச் செயலாளா் அபு என்கிற மகபூப் அலி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சேலம் மாநகா் மாவட்ட பொறுப்பாளா்கள் எம்.கே. செல்வராஜ், ஏ.கே.எஸ்.எம். பாலு, சேலம் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பாலசுப்ரமணியன், மாநகர அவைத் தலைவா் பன்னீா்செல்வம் ஆகியோா் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினா். இதேபோல் மாநகா் முழுவதும் உள்ள கோயில்களில் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்தநாளையொட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.